ஆயுத ஒப்பந்தம்..114 ரஃபேல் விமானங்கள்..!
இந்திய விமானப்படையில் மொத்தம் 42 படைப்பிரிவுகள் உள்ளன. ஆனால் தற்போது 29 படைப்பிரிவுகளுக்கு மட்டுமே விமானங்கள் உள்ளன. இதனால் 13 விமானப்படைப்பிரிவுகளுக்கு விமானங்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த குறையை போக்க, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் நாட்டிடம் இருந்து மேலும் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க உள்ளது. இந்த ஒப்பந்தம் 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலானது.
இந்த மாத இறுதியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியா வர உள்ளார். அந்த சமயத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. அதற்கு முன்பாக பாதுகாப்பு துறையின் கொள்முதல் கவுன்சில் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ கொள்முதலாக இது இருக்கும். மேலும், பிரான்ஸ் நாட்டிற்கு அடுத்தப்படியாக, ரஃபேல் விமானங்களை அதிகம் வைத்திருக்கும் நாடாகவும் மாறும்.
114 போர் விமானங்களில் 88 விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்டதாகவும், 26 விமானங்கள் இரட்டை இருக்கை வகையை சேர்ந்ததாகவும் இருக்கும். மொத்தமுள்ள 114 விமானங்களில் 18 பிரான்சிடம் இருந்து வாங்கப்படும். மீதமுள்ள விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. இதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனம், பிற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.
தற்போது இந்தியா வாங்க உள்ள ரஃபேல் போர் விமானம் ஸ்டேண்டட் F4 ரகத்தை சேர்ந்தது. இந்தியா ஏற்கனவே வைத்திருக்கும் 36 விமானங்களையும் F4 தரத்திற்கு மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. F4 தரத்திலான விமானங்களால், ஏவுகணைகளை சுமந்து சென்று தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க முடியும். அதாவது Air to Air Missiles மற்றும் Air to Ground என்ற 2 வகையான தாக்குதலை இந்த விமானத்தால் மேற்கொள்ள முடியும்.
‘சூப்பர் ரஃபேல்’ என அழைக்கப்படும் F5 ரக விமானங்களை 2030-ஆம் ஆண்டில் தயாரிக்கவும் இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இந்தியாவிடம் உள்ள 36 ரஃபேல் போர் விமானங்களில், கடைசி ‘C’ ரக விமானம் 2024-ஆம் ஆண்டு, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது கடற்படைக்கு 26 ‘M’ ரக ரஃபேல் விமானங்களை வாங்கவும் 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் கொடுக்கப்பட்டது.
இதில் 4 இரட்டை இருக்கை பயிற்சி விமானங்களும் அடங்கும். ‘M’ ரக ரஃபேல் விமானங்கள் INS விக்ராந்த் மற்றும் INS விக்ரமாதித்யா போர் கப்பல்களில் பயன்படுத்தப்பட உள்ளன. ‘C’ ரக விமானங்கள் கோல்டன் ஏரோஸ் மற்றும் ஃபால்கன்ஸ் படை பிரிவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரின் போது ரஃபேல் போர் விமானங்கள் SCALP ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




