--- --:--:-- --

தருமபுரியில் மாம்பழம் பழுக்குமா?  இலை துளிர்க்குமா? தருமபுரியில் முந்துவது யார்? ஆச்சரிய முடிவுகளை தரும் வாக்காளர்கள்!

25

மிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 10ஆவது தொகுதியாக உள்ளது, தருமபுரி. பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி இங்கு களமிறங்கி இருப்பதால், ஸ்டார் அந்தஸ்தை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த தொகுதி.

 

கடந்த 1977இல் உருவானது தருமபுரி தொகுதி. 12 முறை தேர்தலை சந்தித்துள்ள இந்த தொகுதியில் பாமக 4 முறை, திமுக 3 முறை, அதிமுக, காங்கிரஸ் தலா 2 முறை வெற்றி பெற்றன. த.மா.கா. தருமபுரியில் ஒருமுறை வென்றுள்ளது. வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி. தங்கபாலு, மு. தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலங்கள்.

 

காவிரி ஆறு கர்நாடகாவில் இருந்து தமிழகத்தில் நுழையும் பகுதியில் உள்ளது தருமபுரி. தருமபுரி தொகுதி, அதிக கிராமப்பகுதிகளை கொண்டது. தொழிற்சாலைகள் இல்லை; விவசாயமே இங்கு பிரதான தொழிலாகும். தக்காளி, கரும்பு, கேழ்வரகு, மாம்பழம், மரவள்ளிக் கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மழை பொய்த்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் என்பதால், வயிற்றுப்பிழைப்புக்காக இங்குள்ள பலரும் வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கும் கூலித்தொழிலாளர்களாக செல்லும் சூழல் உள்ளது.

 

தருமபுரி பாராளுமன்றத் தொகுதியில், 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அவை, தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு மற்றும் அரூர் (தனி) ஆகியன அடங்கும். தொகுதியில் 35%க்கும் அதிகமானோர் வன்னியர்கள். அவர்களே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.

 

2019 தேர்தலில் தி.மு.க வசம் இத்தொக்தி இருந்தது. தி.மு.க வேட்பாளர் டாக்டர் செந்தில் குமார் 6%க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செந்தில் குமார் 5,74,988 வாக்குகளையும், அன்புமணி ராமதாஸ் 5,04,235 வாக்குகளையும் பெற்றனர். அ.ம.மு.க 53,655 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 19,674 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 15,614 வாக்குகளையும் பெற்றன. நோட்டாவுக்கு 1.09% (13,379) வாக்குகள் விழுந்தன.

 

2024இல் தருமபுரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,12,732

 

ஆண் வாக்காளர்கள்: 7,64,878
பெண் வாக்காளர்கள்: 7,47,678
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 176

 

 

தி.மு.க கூட்டணியில் இந்த முறையும் திமுகவே நேரடியாக களமிறங்கி இருக்கிறது. திமுக சார்பில் ஆ. மணி, அதிமுக சார்பில் டாக்டர் அசோகன், பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். திமுக வேட்பாளர் மணி, தருமபுரி மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஆவார்.

 

இந்த தொகுதியில் கடந்த முறை அன்புமணி தோல்வியடைந்த நிலையில், இம்முறை அவரது மனைவி களமிறங்கி இருக்கிறார். ஆரம்பம் முதலே தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறது. அன்புமணியின் மகள்களும் தொகுதி முழுவதும் அனல்வேக பிரசாரம் செய்து வருகின்றனர். தொகுதி மக்களை மாமா, அக்கா, அண்ணா, பெரியப்பா, சித்தப்பா என்று உறவு முறைகளைச் சொல்லி அழைத்து பிரசாரம் செய்து வருகிறார். இது தொகுதியில் நல்ல பலனையும் கட்சியினருக்கு உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. அதனால் எப்படியும் இந்த முறை தருமபுரியில் மாம்பழம் பழுக்கும் என்ற நம்பிக்கையோடு பாட்டாளி மக்கள் கட்சியினர் பெரும் உற்சாகத்துடன் களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.

 

அதிமுக சார்பில் டாக்டர் அசோகன் போட்டியிடுகிறார். இவருக்கு தேர்தல் களம் என்பது புதியது. எனினும் அதிமுகவுக்கு கிராமப்பகுதிகளில் உள்ள இரட்டை இலை செல்வாக்கு, பிளஸ்பாய்ண்ட் ஆகும். எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து பிரசாரம் செய்த பின் அதிமுகவினர் தெம்போடு உள்ளனர்.

 

தருமபுரியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு மக்களவைக்கு சென்ற செந்தில்குமார், சர்ச்சைகளுக்கு பேர்போனவர். அவர் மீது அதிருப்திகள் இருந்தாலும் தொகுதிக்கு சில பணிகளைச் செய்துள்ளார். எனினும் கட்சி நிர்வாகிகளை அனுசரித்து செல்லாதது உள்ளிட்ட காரணங்கள், சர்ச்சை பேச்சு போன்றவற்றால் அவருக்கு இம்முறை வாய்ப்பு தரப்படவில்லை.

 

அதே நேரம், திமுக மீதான அதிருப்தியில் உள்ளவர்களின் வாக்குகள் பாமகவுக்கு மட்டுமின்றி அதிமுகவுக்கும் பிரிந்து செல்வதால், அது திமுகவுக்கு சாதகத்தை ஏற்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நிறைவேற்றிய திட்டங்களை சொல்லி திமுகவினர் வீதிவீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர். மாநிலத்தை ஆளும் கட்சி என்பதால் திமுகவுக்கு கணிசமான வாக்களிக்க விரும்புவதாக தொகுதிவாசிகள் பலர், குற்றம் குற்றமே சிறப்பு குழுவினரிடம் தெரிவித்தனர். இத்தொகுதியின் பொறுப்பாளராக உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தருமபுரியில் சூரியனை உதிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பம் முதலே தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

 

தொகுதியில் பாமக பலமாக இருந்த போதும், அதிமுகவுக்கு என ஒரு மவுசு இருந்த போதும் தருமபுரியின் தற்போதைய கள நிலவரம் உதயசூரியனுக்கு சாதகமாகவே உள்ளது. கடைசி கட்ட பரப்புரைகள் வெற்றி வித்தியாசத்தை வேண்டுமானால் குறைக்கலாமே தவிர, தருமபுரியில் கடும் போட்டிக்கு மத்தியில் மணியின் ஓசை கேட்கும்; மாம்பழம் பழுக்காது; இலை துளிர்க்காது என்பதே கள நிலவரமாக உள்ளது.

 

Right Menu Icon