பிரியும் வாக்குகள்…செழிக்கும் திமுக! பொள்ளாச்சியில் யார் ஆட்சி?
கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்றாலே இளநீர், தென்னை என்ற நினைவுக்கு வரும். குளுளுவான பொள்ளாச்சியில் தேர்தல் களம் சூடாக உள்ளது. பொள்ளாச்சியில் யார் ஆட்சி என்பதை குற்றம் குற்றமே சிறப்பு நிருபர்கள் குழு நேரில் கள ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகள் இதோ…
கடந்த 1977-ம் ஆண்டு முதல் தனித் தொகுதியாக இருந்த பொள்ளாச்சி தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2009-ம் ஆண்டு பொதுத் தொகுதியாக மாறியது. தமிழகத்தில் அதிக அணைகள் உள்ள மக்களவைத் தொகுதி இதுவாகும். இங்கு தென்னை, திராட்சை, நிலக்கடலை, மக்காசோளம், காய்கறிகள், தேயிலை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. தமிழகத்தில் அதிகம் தேங்காய் விளையும் பகுதி இது. குறிப்பாக தென்னை விவசாயம், அது சார்ந்த தேங்காய், தேங்காய் நார் தொழில் அதிகமாக நடக்கிறது. கேரள மாநில எல்லையொட்டிய தொகுதி என்பதால் அதன் தாக்கம் உண்டு.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு பொள்ளாச்சி தொகுதி சற்று மாறுதல் அடைந்துள்ளது. கோவையின் தொண்டாமுத்தூர் பகுதியும் இணைந்துள்ளதால், கோவை பகுதியின் அரசியல், சமூக சூழல் தாக்கம் கொண்ட தொகுதியாக உள்ளது. திராவிட கட்சிகளே தொடர்ந்து போட்டியிட்டு வந்துள்ள தொகுதி இது. மதிமுகவுக்கும் ஒட்டு வங்கி இருந்ததால் இரண்டுமுறை அக்கட்சியின் சார்பில் கிருஷ்ணன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.1951, 1957, 1962 ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக ஏழு முறை வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மடத்துக்குளம், உடுமைலப்பேட்டை, தொண்டாமுத்தூர், வால்பாறை (தனி) தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
பொள்ளாச்சி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,81,795
ஆண் வாக்காளர்கள்: 7,66,077
பெண் வாக்காளர்கள்: 8,15,428
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 290
கடந்த தேர்தலில் பொள்ளாச்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட சண்முக சுந்தரம் 5,54,230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 3,78,347 வாக்குகளை பெற்று இரண்டாவது இடம் பெற்றார். மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் நின்ற மூகாம்பிகை 59,693 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் தனுஜா 31,483 வாக்குகளையும் பெற்றன.
இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி, அதிமுக சார்பில் கார்த்திகேயன், பாஜக சார்பில் வசந்தராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். திமுக வேட்பாளராக மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமியும், அதிமுக வேட்பாளராக ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் என்ற கார்த்திக் அப்புசாமியும் தொகுதியில் நல்ல அறிமுகம் ஆனவர்கள்.
மடத்துக்குளம் பகுதியில் அதிமுகவை விட திமுகவின் செல்வாக்கு மேலோங்கி இருக்கிறது. உடுமலை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக, அதிமுக இரண்டுமே சரிசமமாக உள்ளன. இங்கு திமுக பலவீனமாக உள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் பாஜகவின் வாக்குவங்கி கணிசமாக அதிகரித்துள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கோட்டையாக உள்ள தொண்டாமுத்தூரிலும் அதிமுகவின் ஆதிக்கம் உள்ளது.
ஆனாலும், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியின் தீவிரமாக பிரசாரம், பொள்ளாச்சியில் திமுகவின் செல்வாக்கை தூக்கி நிறுத்தி இருப்பதை, குற்றம் குற்றமே கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இது திமுக அரசின் செயல்பாடு சிறப்பாக இருப்பதற்கு உதாரணமாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது, திமுகவிற்கு பெரும் பலமாகும்.
கடந்த முறை 51 சதவீத வாக்குகள் பெற்ற திமுக, இம்முறை 40 சதவீதத்தை தாண்டினாலே பெரியவிஷயம்தான். ஆனால், திமுகவுக்கு எதிரான வாக்குகள் பாஜக, அதிமுக என்று பிரிவதால் அது திமுகவுக்கு சாதகமாக்கி, பொள்ளாச்சியில் திமுகவின் வெற்றியை பிரகாசமாக்கி வருகிறது.





