திமுகவில் இணைந்த அமமுக துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜா..!
அதிமுக – பாஜக கூட்டணியில் அமமுக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த மாணிக்கராஜா அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அவருடன் தென்காசி வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் ராஜா, “தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அப்படி இருக்கும்போது, 8 ஆண்டுகள் கஷ்டபட்டு வளர்த்த அமமுகவை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அமமுக தலைமை கேட்கவில்லை. பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பப்படி திமுகவில் இணைந்துள்ளோம்” என்றார்.
மேலும், “3 மாவட்ட செயலாளர்கள் வந்துள்ளார்கள். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையில் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளோம்” என்றார். முன்னதாக மாணிக்கராஜாவை, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சியிலிருந்து நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.





