இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஜூனில் உச்ச கட்டத்தில் இருக்கும்..! செப்டம்பர் வரை லாக்டவுன்..! அமெரிக்க நிறுவனம் அபாய எச்சரிக்கை!!
இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு ஜூன் மாதத்தில் உச்ச கட்டத்தில் இருக்கும் எனவும், ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
கொரோனா.. கொரோனா.. இந்த வார்த்தையை கேட்டாலே உலக மக்கள் அச்சத்தில், பீதியில் உறையச் செய்யுமளவுக்கு, கொரோனா வைரஸ் என்னும் ஆட்கொல்லி வைரஸ், கொத்து கொத்தாக மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. சீனாவில் தொடங்கிய கொரோனாவின் ஆட்டத்தை, அந்த நாட்டுக்கு மட்டுமே வந்த சோதனை போல உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன. ஆனால் சீனாவோ தன்னந்தனி நாடாக இந்த கொடிய வைரஸ் நோய்க்கு எதிராக அத்தனை சக்திகளையும், யுக்திகளையும் கையாண்டு மீண்டு விட்டது சீனா.
ஆனால், சீனாவில் கொரோனாவின் விளையாட்டை சீரியசாக எடுக்காமல் வெறுமனே வேடிக்கை பார்த்ததன் விளைவை உலக நாடுகள் இப்போது அனுபவித்து வருகின்றன. சீனாவில் இந்த வைரஸ் பரவுவது அறிந்த அடுத்த நிமிடமே அந்த நாட்டில் அனைத்து பகுதிகளும் லாக் டவுன் செய்யப்பட்டன. ஒட்டு மொத்த ராணுவமும் களத்தில் இறங்கி, சிகிச்சைக்கான மருத்துவமனைகளை புதிதாக உருவாக்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் ஈடுபட்டது.

அந்நாட்டு மக்களும் அரசின் உத்தரவுகளை ராணுவக் கட்டுப்பாட்டுடன் மதித்து ஒத்துழைத்தனர். இதனாலேயே அந்த நாடு மூன்றே மாதத்தில் கொரோனா பிடியிலிருந்து விடுபட முடிந்தது. கொரோனாவால் அந்நாட்டில் ஏற்பட்ட 3300 என்ற உயிரிழப்பும், இப்போது உலகின் பிற நாடுகளில் ஏற்பட்டு வருவதை ஒப்பிடும் போது மிகச் சொற்பம் என்றாகி இப்போது சகஜ நிலைக்கும் திரும்பி விட்டனர் சீனர்கள் .
ஆனால், சீனாவில் கொரோனா தாண்டவமாடியபோதே உஷாராகியிருக்க வேண்டிய உலகின் பிற நாடுகள் அலட்சியம் காட்டியதன் பலன், இப்போது அலறி துடிக்க வைத்து விட்டது. சீனாவை தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின் பிரிட்டன், பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, ஈரான் மற்றும் உலகின் பெரிய அண்ணன் என கூறப்படும் அமெரிக்கா வரை பரவி,அந்நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் உயிர்களை காவு வாங்கி கோரத் தாண்டவமாடி வருகிறது.
இப்போது உலக மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்த 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவிலும் கொரோனாவின் ஆட்டம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. நமது நாட்டிலும் முதல் கொரோனா பாதிப்பு ஜனவரி 30-ந் தேதியே உறுதியானது. ஆனால் அப்போதே சீரியசாக எடுக்காமால் விட்டு, ஒன்றரை மாதம் கழித்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மார்ச் 24-ல் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த 10 நாட்களில் கொரோனாவின் பாய்ச்சலோ அதிதீவிரமாகியுள்ளது. இதன் வேகம் வரும் நாட்களில் இன்னும் அதிவேகமாகும் என்பதாகவே கூறப்படுகிறது.

ஏனெனில், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டாலும், சீனாவைப் போல் நம் ஜனங்களின் ஒத்துழைப்பு இல்லாமையும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்ட போதும், விபரீதம் புரியாமல் வீதிகளில், தெருக்களில், சாலைகளில் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றனர். இதுவும் கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு வரும் 14-ந் தேதியுடன் முடிவுக்கு வந்து விடுமா? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழத் தொடங்கியுள்ளது. ஆனால் அமெரிக்காவின் பிரபல போஸ்டன் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலோ இந்தியாவை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்குவது போல் உள்ளது.
அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் நிறுவனம், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்பது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில்தான் நீக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய சுகாதாரத்துறை மற்றும் அரசின் திட்டங்களின் செயல்பாட்டால் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத்தே ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது. அது மட்டுமின்றி இந்தியாவில் ஜூன் மாதத்தின் 3-வது வாரத்தில்தான் கொரோனா பாதிப்பு என்பது உச்ச கட்டத்தில் இருக்கும் என்றும் பீதியை கிளப்பி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அமெரிக்க நிறுவனத்தின் கூற்றுப்படி இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மூன்று அல்லது 4 மாதங்களுக்கு தொடரும் பட்சத்தில், 130 கோடி மக்கள் கொண்ட நாட்டில், அதிலும் பெரும்பான்மை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் நம் நாட்டில் உணவுப் பஞ்சம் முதல் என்னென்ன விளைவுகளும், விபரீதங்களும் நிகழுமோ என்று அச்சம் கொள்ள வைக்கிறது என்பதே நிஜமான உண்மையாக உள்ளது.
உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கும் எந்த திட்டமும் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசின் கேபினட் செயலர் ராஜீவ் கவுபா தெரிவித்துள்ளது எந்தளவுக்கு சாத்தியம் என்றும் கேள்விகள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.






