--- --:--:-- --

சசிகலா நீக்கத்திற்கு பிறகு முதல்முறையாக கூடுகிறது -அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்!

IMG-20191107-WA0009

நவ.24-ல் அதிமுக செயற்குழு,
பொதுக்குழு : சசிகலா நீக்கத்திற்குப் பின் முதல் தடவையாக கூடுகிறது

 

அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 24-ந் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-ல் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பொதுக் குழுக் கூட்டம் என்பதால் இந்தக் கூட்டம் அதிமுக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுக பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் இறுதியில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பின் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவை, அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் ஒன்று சேர்ந்து ஓரம் கட்டின. தொடர்ந்து,2017-ம் ஆண்டு செப்டம்பரில் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அத்துடன் அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி இனிமேல் கிடையாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

அந்தப் பொதுக்குழுவில் தான் கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டனர். அது முதல் கட்சி சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் எடுப்பதில் இவர்கள் இருவரும் கூட்டாக செயல்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரும் 24-ந் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னையில் கூடும் என ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் 24-ந் தேதி காலை 10 மணிக்கு செயற்குழுவும், அதைத் தொடர்ந்து பொதுக்குழுவும் கூடும் என்றும், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் காலக்கட்டத்தில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது, அதிமுகவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon