மின் கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கி ஒரு பெண் உயிரிழந்த சம்பவம்..!
சென்னை புளியந்தோப்பில் மின் கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொறியாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் புளியந்தோப்பில் பூமிக்கு அடியில் சென்ற கம்பியில் ஏற்பட்ட கசிவினால் மின்சாரம் தாக்கி அரிமா என்ற பெண் உயிரிழந்திருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தகுந்த விசாரணை மேற்கொண்டு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உதவி கோட்ட மின் பொறியாளர் கண்ணன் மற்றும் இளநிலை பொறியாளர் வெங்கட்ராமன் ஆகியோர் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எந்த இடத்திலும் மின் கசிவோ அல்லது பழுதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







