கோவையில் “ஐந்து மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை பாடி” உலக சாதனை படைத்த கல்லூரி மாணவர்
கோவையில் உள்ள கிராமிய புதல்வன் கிராமிய கலை குழுவை சேர்ந்த மாணவர்கள் தினம் ஒரு சாதனை எனும் முயற்சியாக கிராமிய இசை கருவிகளை தொடர்ந்து பல மணி நேரம் வாசித்து சாதனை செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் புதுக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவரான மணிகண்டன் என்ற கலைமணி நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை தொடர்ந்து ஐந்து மணி நேரம் பாடி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இவருடன் இணைந்து இதே குழுவை சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவன் ஐந்து மணி பத்து நிமிட நேரங்கள் தவில் வாசித்து சாதனை செய்துள்ளார்.ஏற்கனவே ஐந்து மணி நேர தவில் வாசித்த சாதனையை முறியடிக்கும் வகையில் இதனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுப்புற பாடல்களை பாடிய சாதனை மாணவர் கலைமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்றைய இளைஞர்கள் சினிமா பாடல்களை விரும்பி பாடி வரும் நிலையில் நாட்டுப்புற பாடல்களை தாம் பாடி ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு ஐந்து மணி நேரம் தொடர்ந்து பாடி சாதனை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டுப்புற பாடல் கலையை மீட்கும் வகையில் இவர் செய்த இந்த சாதனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.







