--- --:--:-- --

தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதற்காக சூடான் நாட்டிற்கு வேலைக்கு சென்றவர் தீ விபத்தில் பலி

15

தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதற்காக சூடான் நாட்டிற்கு வேலைக்கு சென்றவர் பயங்கர தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது உடலை பெற்று தர குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கனவுகளை சுமந்து கொண்டு குடும்ப நலனுக்காக குடும்பத்தை துறந்து வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் ஏராளம். அப்படி ஒரு கனவுடன் சூடான் சென்றிருக்கிறார் காரைக்காலை அடுத்த கிராமத்தின் சிதம்பரம், சித்ரா தம்பதியினரின் மகன் வெங்கடாசலம்.

 

சகோதரியின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காகவும், பெற்றோரின் கடனை திருப்பி அடைப்பதற்காகவும் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி சூடான் தலைநகர் கார்டோவின் பக்ரி பகுதியிலுள்ள செராமிக் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

 

இந்நிலையில் தான் கடந்த நான்காம் தேதியன்று அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. செராமிக் தொழிற்சாலையில் நடந்த தீவிபத்தில் வெங்கடாசலம் உள்ளிட்ட 23 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.

 

விபத்தின்போது தமிழர்கள் உயிரிழந்து விட்டதாக தகவல் வந்தபோது தங்களது மகன் உயிரோடு இருப்பான் என நம்பிய பெற்றோருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வெங்கடாச்சலம் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தது. தங்கள் பேச்சை கேட்காமல் வெளிநாட்டிற்குச் சென்ற மகன் தற்போது தங்களை நிர்க்கதியாக விட்டு சென்று விட்டதாக கண்ணீர் விடுகிறார் அவரது தாயார் சித்ரா.

 

தமக்கும், தமது குடும்பத்திற்கும் இருந்த ஒரே ஆறுதலான மகனை இழந்து நிர்க்கதியாக நிற்பதாக வேதனை தெரிவிக்கிறார் வெங்கடாச்சலத்தின் தந்தை சிதம்பரம். உயிரிழந்த வெங்கடாசலத்தின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வர மத்திய ,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் அனைவரும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

உயிரிழந்த நபரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்து வருவதாக அம்மாநில அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon