--- --:--:-- --

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கேன்டீன் ஊழியர்..!

4

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த கேன்டீன் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 24-ஆம் தேதி நள்ளிரவு சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி ஒருவர் தான் தங்கியிருக்கும் இடத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

 

கேன்டீன் அருகே இருள் சூழ்ந்த பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவி போராடி அந்த நபரிடம் இருந்து தப்பித்துள்ளார். மாணவியின் நண்பர் மூலம் இந்த தகவல் வெளியான நிலையில் சம்பவத்தை அறிந்து கோட்டூர்புரம் போலீசார் ஐஐடி வளாகத்தில் உள்ள ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தினர்.

 

நிர்வாகத்திடமும் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. உதவி ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியாற்றும் வடமாநில நபர்கள் உட்பட 300 நபர்களின் புகைப்படங்களைக் கொண்டு அடையாள அணிவகுப்பு போன்ற முறையை நடத்தினார்.

 

இரவு நேரத்தில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவரை சரியாக அடையாளம் காட்ட இயலவில்லை. சம்பந்தப்பட்ட ஐஐடி மாணவிகள் எழுத்துப்பூர்வமாக கோட்டூர்புரம் போலீசார் புகாரை பெற்று சந்தேகத்தின் அடிப்படையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்திரகுமார் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 

வளாகத்தில் அமைந்துள்ள கேன்டீனில் ஜூஸ் மாஸ்டராக வேலை பார்க்கிறார். விசாரணையில் மாணவியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானதால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணை மானபங்கம் செய்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon