பல்லடத்தில் அதிமுக சார்பில் ஆனந்தன் வேட்புமனு! – ராசி ஆனார் சிட்டிங் எம்.எல்.ஏ. நடராஜன்!!
பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வேட்புமனு தாக்கல் செய்தார். தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்று ஆனந்தனை அழைத்து வந்தனர்.
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாத நிலையில் அதிமுக – திமுக களமிறங்குகின்றன. அதிமுக அணியில் பாமக, பாஜக, திமுக அணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அமமுக அணியில் தேமுதிக, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியன போட்டியிடுகின்றன.
பல்லடம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் ஆனந்தன் போட்டியிடுகிறார்.சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக உள்ள நடராஜனுக்கு, ‘சீட்’ மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஆனந்தனுடன் நடராஜன் ராசியானார். பலமுனை போட்டி நிலவும் சூழலில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல், கடந்த 12ம் தேதி தொடங்கியது; வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில், சுபமுகூர்த்த தினம் என்பதால், பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தமிழக அளவில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால், அரசு அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. திரும்பிய பக்கம் எல்லாம் கட்சிக்காரர்கள் கரை வேட்டியுடன் காணப்படுகிறனர்.
பல்லடத்தில் அதிமுக வேட்பாளரான எம்.எஸ்.எம். ஆனந்தன், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான வி கணேஷிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் சிட்டிங் எம்.எல்.எ. நடராஜன் உடனிருந்தார். அதன் பின்னர் வெளியே வந்த ஆனந்தனை கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாழ்த்தி வரவேற்றனர்.
பல்லடத்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடும் சூழலில், திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் க. முத்துரத்தினம், அமமுக – ஜோதிமணி, மக்கள் நீதிமய்யம் சார்பில் அக்கட்சியின் விவசாயிகள் பிரிவு மாநிலச் செயலாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் கரிகாலன் (எ) சுப்பிரமணியன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




