தொடங்கியது அதிமுக வேட்பாளர் நேர்காணல்! யார் யாருக்கு யோகம் அடிக்கிறது?
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த அதிமுகவினருக்கான நேர்காணல் இன்று தொடங்கி இருக்கிறது. தங்களுக்கு மீண்டும் யோகம் அடிக்குமா, வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. ஒருமாத அவகாசமே உள்ளதால், அரசியல் கட்சிகள் மின்னல் வேகத்தில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. ஆளும் அ.தி.மு.க. சார்பில் பிப்ரவரி 24ம் தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு பெறப்பட்டது; இது, நேற்று (3ம் தேதி) மாலையுடன் நிறைவடைந்தது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட, 8,200-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர்.
குறிப்பாக, கடைசி நாளான நேற்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் விருப்ப மனு பெறுவதற்காக கட்சியினர் குவிந்தனர். அப்பகுதியே கரை வேட்டி, துண்டு அணிந்திருந்த தொண்டர்களால் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடைசி நாளில், அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்), ஆர்.பி.உதயகுமார் (திருமங்கலம்), கே.சி.கருப்பணன் (பவானி), அ.தி.மு.க. கலைப்பிரிவு செயலாளரும், சினிமா இயக்குனருமான ஆர்.வி.உதயகுமார் (விருகம்பாக்கம், தியாகராயநகர்) உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்தனர். அதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கம்பம், வில்லிவாக்கம், கொளத்தூர் தொகுதிகளில் போட்டியிடக்கோரி, அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் விருப்பமனு அளித்தனர்.
இதை தொடர்ந்து, அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்குகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வேட்பாளர் தேர்வு இன்று நடக்கிறது. அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.
அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட தங்களுக்கு மீண்டும் யோகம் அடிக்குமா, வேட்பாளராக களமிறங்க அதிமுக வாய்ப்பு தருமா என்ற எதிர்பார்ப்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள், அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமைகத்தில் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.





