--- --:--:-- --

திடீரென மனம் மாறிய சசிகலா! பின்னணி பாஜக உள்ளதா? அதிமுகவின் மனநிலை என்ன?

Sasikala 01

சட்டசபைத் தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நேரத்தில், அரசியலுக்கு முழுக்கு என்ற அறிவிப்பை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சசிகலா. இதன் பின்னணியில், பாஜகவின் தேர்தல் வியூகம் இருப்பதாக கூறப்படுகிறது.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் திருபினார். பெங்களுருவில் இருந்து சென்னை திரும்புவதற்கு அவருக்கு 23 மணி நேரம் பிடித்தது; அந்தளவுக்கு கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு தந்து திக்குமுக்காட வைத்தனர்.

 

சசிகலா தீவிர அரசியலில் இருப்பாரா, அல்லது ஓய்வெடுப்பாரா என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் வழியில் கிருஷ்ணகிரியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றார். அப்படிச் சொன்னவர், ஒரு மாத காலத்திற்குள் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்க முடிவெடுத்தது ஏன்? அவரை மனமாற்றம் செய்ய வைத்த சக்தி எது? இதுபற்றி தலைநகர செய்தியாளர்கள் பல்வேறு தகவல்களை கூறுகின்றனர்.

 

பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தின்படியே சசிகலா இப்படியொரு முடிவை அறிவித்திருப்பதாக, ஒருதரப்பினர் கூறுகின்றனர். வரும் தேர்தலில், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்று கருத்து கணிப்புகளும், உளவுத்துறை அறிக்கையும் சுட்டிக் காட்டியுள்ளன. இந்த நிலையில், திமுகதான் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றால் அதிமுக- அமமுக ஒன்றிணைய வேண்டும் என்பது பாஜகவின் திட்டம்.

 

ஆனால், அதிமுக தலைமை இதற்கு சம்மதிக்காததால், அதிமுகவுக்க்கான வாக்குகள் பிளவுபடும் அபாயம் உள்ளது. இது திமுகவின் வெற்றியை எளிதாக்கிவிடும் என்று டெல்லி பாஜக தலைமை கணித்துள்ளது. எனவே, அதிமுக வாக்குகள் சிதறாமல் இருக்க, சசிகலாவின் மூலம் பாஜக காய்களை நகர்த்தி இருப்பதாக கூறுகிறார்கள். எனவே அரசியலுக்கு முழுக்கு என்ற சசிகலாவின் அறிவிப்பு, தற்காலிகமானதாக இருக்கும் என்றும், இப்படி அறிவிப்பதன் மூலம் ஏற்படும் அனுதாபம், நடுநிலை வாக்காளர்களின் வாக்கு திமுக பக்கம் திரும்பாது என்றும் அவர்களின் கணிப்பாகும்.

 

இன்னும் சிலரோ, சசிகலாவில் முடிவுக்கு யாருடைய நிர்ப்பந்தமும் காரணமில்லை. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர் தளர்ந்துவிட்டதால் இம்முடிவுக்கு அவர் வந்திருப்பதாக் கூறுகிறார்கள். அதிமுகவை தாம் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்து செயல்பட்டால், அதிமுகவுக்கு பாதகமாகிவிடும்; திமுகவுக்கு சாதகமாகிவிடும். திமுக மீண்டும் பலமாகி ஆட்சியைப் பிடித்துவிடக்கூடாது என்றால், அதிமுகவை கைப்பற்றும் எண்ணத்தை தற்காலிகமாக விட்டுவிட வேண்டும் என்றும் அவர் கருதினாராம்.

 

சென்னை திரும்பியதும் அதிமுகவில் இருந்து தன்னிடம் பலர் தொடர்பு கொள்வார்கள் என்று சசிகலா எதிர்பார்த்திருந்ததாகவும், ஆனால் அப்படி எதுவும் நடக்காதது அவருக்கு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளித்திருப்பதாகவும் சொல்கிறார்கள். தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் நுழைய முடியாது; ஆனால் அதிமுக தோற்றுவிட்டால், அரசியல் விலகல் முடிவை சசிகலா திரும்பப்பெற்று, மீண்டும் அதிமுகவிற்கு தலைமை ஏற்கும் திட்டமாகவும் கூட இது இருக்கலாம் என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

 

எனினும், சசிகலாவின் இந்த முடிவு, தேர்தலில் எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. ஆனால் அதிமுக தலைமைக்கும் அக்கட்சி நிர்வாகிகளுக்கும் பெரும் நிம்மதியை தந்துள்ளது. சசிகலா தனித்து செயல்பட்டால் அது அதிமுக வாக்கு வங்கியை பாதிக்கும் என்று அவர்கள் கருதினர். தற்போது அரசியல் ஓய்வு என்ற சசிகலாவின் அறிவிப்பு அதிமுகவினர் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Leave a Reply

Right Menu Icon