தீவிர மத சார்புள்ள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததற்கு விமர்சனம்..!
மேற்கு வங்காளத்தில் தீவிர மத சார்புள்ள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததற்கு அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா விமர்சித்துள்ளார். தீவிர மத சார்புள்ள நிலையை பின்பற்றும் ஐ எஸ்எஃப் எனப்படும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பது அதன் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என ஆனந்த் சர்மா குறிப்பிட்டிருக்கிறார்.
இது போன்ற முடிவுக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டியின் ஒப்புதல் பெறப்பட்டு இருக்க வேண்டும் என்றும் ஆனந்த் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியின் தலைவர் அப்பாஸ் சித்திக்குடன் தேர்தல் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அஞ்சன் சவுத்ரி பங்கேற்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையை கொண்டுவர வேண்டுமென குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட தலைவர்கள் கடந்த சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அண்மையில் எம்பி பதவியிலிருந்து குலாம்நபி ஓய்வு பெற்றபோது அவரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பேசி இருந்தார் என்பதும், பின்னர் பிரதமரை குலாம்நபி புகழ்ந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையின் முடிவை மற்றொரு மூத்த தலைவர் ஆனந்த் சர்மா வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.






