ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த மூன்று பேரை கைது செய்த போலீஸ்..!
யூடியூப் சேனல் காக பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த மூன்று பேரை சாஸ்திரிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். யூடியூப் சேனல்களை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் சேனல் தொடங்கலாம் என்கின்ற நிலை இருப்பதால் புற்றீசல் போல பெருகி வருகின்றன.
அதோடு காசு பார்க்கும் நோக்கத்திலும் தங்களை பிரபலப்படுத்தும் நோக்கத்திலும் வரம்பு மீறி சில சேனல்கள் செயல்படுகின்றன. குறிப்பாக சினிமா துறையை சேர்ந்தவர்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுக்கள் இருப்பதும் உண்டு.
அந்த வகையில் சமீபத்தில் யூடியூப் சேனலில் பெண்களிடம் ஆபாசமாக பேசி எடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. யூடியூப் சேனலை சேர்ந்த சிலர் கருத்து கேட்பதாக கூறி பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் பெண்களிடம் விரட்டி விரட்டி சென்று ஆபாசமான கேள்விகளை கேட்டு பதில் கூறுமாறு தொல்லை தருவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது.
கடற்கரையில் கடை நடத்தி வரும் பெண் வியாபாரி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த சாஸ்திரிநகர் போலீசார் பேட்டி எடுத்த இளைஞர், கேமராமேன் ஆகியோரை அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கேமராவில் பெண்களின் அனுமதி இல்லாமல் தொல்லை செய்தும் விரட்டி விரட்டி ஆபாசமாக கேள்வி கேட்பது போன்று காட்சிகள் பதிவாகி இருந்தது. பொது இடத்தில் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக யூடியூப் சேனலை சேர்ந்த நிகழ்ச்சி தொடர்பாளர் அசன் பாஷா, கேமராவும் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை சாஸ்திரிநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் ஆபாசமாக பேசுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட பாஷா சமீபத்தில் இளம் பெண்கள் இடத்தில் உங்களுக்கு எந்த மாதிரியான பையன்களை பிடிக்கும் என்று கேள்வி கேட்டார்.
அப்போது ஒரு இளம் பெண் உன்னை மாதிரி பையன் தான் பிடிக்கும் என்று முத்தம் கொடுத்துவிட்டு செல்வார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. மேலும் ஏன் இப்படி ஆபாசமாக கேட்கிறீர்கள் என்று யாராவது கேட்டால் அவர்களை இந்த கும்பல் மிரட்டுவது வாடிக்கையாக இருந்துள்ளது.






