அரசு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து..!
அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வை ஆன்லைன் மூலம் நடத்திக் கொள்ளவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அரையாண்டுதேர்வு பொருத்தவரை தனியார் பள்ளிகளில் மட்டும் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடத்திட்டங்களை பொருத்தவரையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை 50 சதவீதமும், 10 மற்றும் 11, 12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் வரையும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .






