தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை.!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 செ.மீட்டரும், ஒட்டன்சத்திரத்திரம் மற்றும் கடலூரில் தலா ஆறு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. சேலம் மட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனேக இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் காலையில் சாரல் அடித்த நிலையில் பின்னர் கனமழை பெய்தது.
புதுக்கோட்டை, ஆலங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் கருங்காலக்குடி, தும்பைப்பட்டி, கீழவளவு, கீழையூர், வண்ணாம்பாறை உள்ள பகுதிகளில்பரவலாக மழை பெய்து வருகிறது.






