எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதில் உலகளவில் இந்தியா 4வது இடம்..!
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய வருமாறு முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மூன்றாவது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடு மற்றும் கால்நடை கண்காட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதில் உலகளவில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 36 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் நடைபெறுவதாக கூறினார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2,000 கோடி டாலர் மதிப்பில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக அதிக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.






