சென்னையில் இரவில் வெளுத்து வாங்கிய கனமழை..!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. தொடர் மழை காரணமாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மதுரவாயல், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு கன மழை கொட்டி தீர்த்தது.
பழவேற்காடு, திருபாலைவனம், பொன்னேரி, மீஞ்சூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் நிரம்பி உள்ளது. மழை தொடரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி விடும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






