--- --:--:-- --

சசிகலா ஒரு வாரத்தில் விடுதலையா? வழக்கறிஞர் சொல்லும் கணக்கு இதுதான்… சாத்தியம் தானா?

sasikala

சிகலா ஒரு வாரத்தில் விடுதலையாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் எனக் கூறி வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஒரு கணக்கை தெரிவித்துள்ளார். அவர் கூற்று சாத்தியம் தானா? சசிகலா விடுதலை ஆவாரா? என்ற பெரும் பரபரப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது.

 

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று கடந்த 2017 பிப்ரவரியில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டு சிறைத் தண்டனை முடிவடைய இன்னும் 4 மாத காலம் உள்ள நிலையில், சசிகலா விடுதலை குறித்து சமீப காலமாக அவ்வப்போது புதுப்புது தகவல்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.ஹ

 

பாஜகவின் மேலிட பிரமுகரான ஆசிர்வாதம் ஆச்சாரி தான் இப்படிப்பட்ட சர்ச்சைகளுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டார். நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே சுதந்திர தினத்திற்கு முதல் நாளான ஆகஸ்ட் 14-ந் தேதி விடுதலையாவார் என ஆச்சாரி டுவீட் போட்டார். ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் புஸ் ஆகி விட்டது.

 

இடையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சசிகலா விடுதலை குறித்து கேள்விக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் அளித்த பதிலில், 2021 ஜனவரி 27-ந் தேதி சசிகலா விடுதலை என தெரிவிக்கப்பட்டது. இதனால் சசிகலா ஜனவரி இறுதியில் தான் வெளியாவார். அதற்கு முன் வாய்ப்பில்லை. ஒரு வேளை சசிகலா விடுதலை என்பது தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை கூட தள்ளிப் போகலாம். எல்லாமே மத்திய பாஜக அரசின் கைகளில் தான் உள்ளது என்றெல்லாம் பலவாறாக பேச்சு அடிபட்டது.

 

ஆனாலும் சசிகலா விடுதலை விஷயத்தில் டிடிவி தினகரனும், வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனும் பல்வேறு மூவ்களில் ஈடுபட்டு வருவதாகவும், அபராதத் தொகையான ரூ.10 கோடியை செலுத்துவதற்கான ஏற்பாடுகளிலும் முனைப்புடன் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.அத்துடன் நன்னடத்தை மற்றும் விடுமுறை நாட்களை கழித்து விரைவில் சசிகலாவை வெளியில் கொண்டு வரும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்ட நிலையில், சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வழக்கறிஞர் சொல்லும் கணக்கு…?

தனியார் டிவி ஒன்றுக்கு நேற்றிரவு அளித்த பேட்டியில் தான் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இன்னும் ஒருவாரத்தில் சசிகலா வெளிவருவதற்கான வாய்ப்பு உள்ளது. கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். சசிகலாவும் 43 மாத காலம் சிறையில் இருந்துள்ளார்.

 

43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே சசிகலா ஒரு வாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும் என ஒரு புதுக்கணக்கை ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது சாத்தியமானால் சசிகலா விடுதலையாகலாம் என்பதால் அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே திடீர் பரபரப்பும், பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அப்படி சசிகலா விரைவில் விடுதலையாகும் பட்சத்தில் அதிமுகவில் என்ன மாதிரி சலசலப்புகள் ஏற்படுமோ? என்றும் பலர் இப்போதே விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon