கொரோனா: இ-பாஸ் நடைமுறையை எளிதாக்க நடவடிக்கை… முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறும் நடைமுறையை எளிதாக்க குழு அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, 2 மாதங்களுக்குப் பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, ஆனால் பொதுப் போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது . இதனால் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் உள்ளோர் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
இ-பாஸ் எளிதில் கிடைக்கும்
மத்திய அரசு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்த நிலையில் தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக் கூட இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. அதுவும் மருத்துவ சிகிச்சை, திருமணம், இறப்பு போன்ற காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஆனாலும் இந்த இ-பாஸ் வாங்குவது குதிரைக் கொம்பாகவே உள்ளது. இதிலும் பெரும் முறைகேடுகள் நடைபெற்று, ஆயிரக் கணக்கில் பணம் கொடுத்தால் இறுக்கு வழியில் எளிதில் கிடைக்கும் சூழல் உருவாகி விட்டது. எனவே இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆயவு செய்ய 2 நாள் பயணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கினார். அதன்படி இன்று காலை திண்டுக்கல் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதல்வர்,திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் மாநில அரசு செய்து வருகிறது.
கொரோனா பாதிப்பால் சுமார் 210 நாடுகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து இல்லை என்பதால் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.தமிழகத்தில் தற்போது அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு செல்கின்றனர். மேலும் இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பால் தான் நோய் பரவல் குறைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உயிரும் அரசுக்கும் மிக முக்கியம்.மக்களைக் காப்பது தான் அரசுக்கு முக்கிய கடமை. அரசு அறிவிக்கின்ற பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.
பின்னர் திண்டுக்கல்லில் தொழில் அதிபர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பூட்டு தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் எந்த தடையும் இன்றி தொடர்ந்து நடைபெறும் விதமாக அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்து வருகிறது.
இ-பாஸ் நடைமுறையை எளிதாக்க குழு ஒன்று அமைக்கப்படும். ஏற்கனவே பணிபுரிந்த வெளி மாநில, வெளி மாவட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அழைத்து வருவதில் உள்ள சிரமங்களை களையவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
இன்று மாலையில் மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை நெல்லை செல்ல உள்ளார்.








