நாளை கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: திமுக ஆட்சி அமைப்போம்…! கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம்..! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!!
நாளை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம். இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திமுக ஆட்சி அமைப்போம்; கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
நினைவு தினம்
தமிழக முதல்வராக 5 முறையும், திமுக தலைவராக 50 ஆண்டு காலமும் பதவி வகித்து, தமிழக அரசியலில் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் மு.கருணாநிதி. கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி மறைந்த அவரது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
நீண்ட மடல்
இதையொட்டி கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையல் அவரின் சாதனைகளை பட்டியலிட்டு நீண்ட மடல் ஒன்றை திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு தொண்டர்களுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கருணாநிதியின் புகழ் போற்றும் நினைவேந்தல் மடல்.
எத்திசை திரும்பினாலும் எனக்குத் தலைவர் கருணாநிதியின் திருமுகம்தான் தெரிகிறது. இயக்கத்திற்காக எந்தப் பணியை மேற்கொண்டாலும் அவர் நினைவுதான் நெஞ்சத்தை வருடுகிறது.
தலைவர் கருணாநிதியின் மடியினில் தவழ்ந்து, அவர் கரம் பற்றி நடந்து, அவர் நிழலின் கதகதப்பில் வளர்ந்த மகன் என்பதைவிட, அந்த கரகரப்பான காந்தக்குரலின் அன்புக் கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட சிப்பாய், தலைவர் கருணாநிதியின் கோடிக்கணக்கான தொண்டர்களில் ஒருவன், அரை நூற்றாண்டு காலம் அவர் தலைமையேற்றுக் கட்டிக்காத்து வளர்த்த இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கும் உங்களில் ஒருவன் என்பதே மனதுக்கு இன்பத்தைத் தருகிறது.
லட்சிய வழி
காவிரி தீரத்தில் பிறந்து வளர்ந்து, காவேரி மருத்துவமனையில் கண் மூடி நிரந்தர ஓய்வெடுக்கும் நாள் வரை, தமிழ்மொழியின் பெருமை, தமிழ் இனத்தின் உரிமை, தமிழகத்தின் செழுமை, முதன்மை இவற்றுக்காகவே பெரியார் – அண்ணா வகுத்தளித்த லட்சிய வழி நின்று, 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வில், ஒவ்வொரு நாளும் தன்னையே உருக்கி ஓயாது உழைத்த உத்தமத் தலைவர் கருணாநிதி.
அரசியல் – ஆட்சி நிர்வாகம் – சொற்பொழிவு – இலக்கியப் படைப்பு – கவியரங்கம் – திரை வசனம் – தொலைக்காட்சித் தொடர் – சமூக வலைதளப் பதிவு என எல்லா நிலையிலும் தனது கொள்கையினை நிலைநிறுத்திய சளைக்காத போராளி. காலத்திற்கேற்ற மாற்றங்களுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நலன் விளைவித்த சமுதாயப் பாதுகாவலர்.
தன்னிகரற்ற தலைவர்
நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதியை இயற்கையின் சதி பிரித்து, ஆகஸ்ட் 7-ம் நாளுடன் இரண்டு ஆண்டுகளானாலும், நம் இதயத்திலிருந்து, அவற்றில் எழும் எண்ணத்திலிருந்து, நம் உதிரத்திலிருந்து, உணர்வுகளிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாதவராக, ஒவ்வொரு தொண்டருக்குள்ளும் தலைவர் கருணாநிதி கலந்திருக்கிறார்.
திமுக தொண்டர்கள் மட்டுமல்ல, கட்சி சார்பற்ற தொண்டர்களும் அவர்களில் உண்டு. தமிழக மக்களின் எண்ணங்களில் தன்னிகரற்ற தமிழாக வாழும் தலைவர் கருணாநிதி.

1974-ல் தலைவர் கருணாநிதிக்கு வயது 50 நிறைவடைந்த போது, அவர் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றிய காலகட்டத்தில் தமிழகத்தின் நிலை என்ன? தமிழர்களின் கல்வி – பொருளாதாரச் சூழல் என்ன?
எண்ணிப் பாருங்கள் தொண்டர்களே!
பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கமுடியாமல் இருந்த ஆயிரமாயிரம் குடும்பங்களில் கல்லூரிக்குச் செல்லும் பட்டதாரி மாணவர்களை உருவாக்கிய வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதி. அரைச் சம்பளம் வாங்கினாலும் அரசாங்க சம்பளம் வாங்க வேண்டும் என்பது பெருங்கனவாக இருந்த குடும்பங்கள் பலவற்றில் எழுத்தராக – தட்டச்சராக – அலுவலராக அரசுப்பணியில் சேரும் வாய்ப்பை இடஒதுக்கீட்டின் வாயிலாக வழங்கி, அவர்களுக்கு அரைச்சம்பளம் அல்ல, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான முழு ஊதியம் வழங்கி, இது கனவல்ல… உண்மை என உணர்ந்திடச் செய்தவர் கருணாநிதி.
“19 ஆண்டுக்காலம் முதல்வர்”
அரை நூற்றாண்டு காலம் திமுக எனும் பேரியக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்று, 19 ஆண்டுக்காலம் தமிழ்நாட்டின் முதல்வராக மக்களின் பேராதரவுடன் பணியாற்றி, தலைவர் கருணாநிதி தீட்டிய திட்டங்களாலும் நிறைவேற்றிய சட்டங்களாலும் பிற்படுத்தப்பட்டோர் – மிகப் பிற்படுத்தப்பட்டோர் – பட்டியல் இன சமுதாயத்தவர் – பழங்குடியினர் – சிறுபான்மை சமுதாயத்தினர் – பெண்கள் – மாற்றுத்திறனாளிகள் – திருநங்கையர் என பயன் பெற்றோர் ஏராளம்.
இறப்பிலும் சளைக்காத இடஒதுக்கீட்டுப் போராளி என மக்களின் மனதில் நிலைத்திருக்கும் கருணாநிதி, ஆட்சிப்பொறுப்பில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் வாயிலாகத் தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்திய அதேவேளையில், மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் அயராமல் போராடினார்.பல குடியரசுத் தலைவர்களையும் பல பிரதமர்களையும் உருவாக்குவதில் இந்திய அரசியலின் சூத்திரதாரியாக விளங்கிய தலைவர் கருணாநிதி, மாநில நலன் காப்பதில் பிற மாநிலத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, இந்திய அரசியல் சாசனம் வழங்குகிற உரிமைகளை நிலைநிறுத்தப் பாடுபட்டார்.
கொள்கை மீது மதவெறி
இன்று இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பெரும் சவால் உருவாகியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மதச்சார்பற்ற கொள்கை மீது மதவெறி ஆயுதங்கள் பாய்ந்து மதநல்லிணக்கத்தை வெட்டுகின்றன. எளிய மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள், உதவிகள் உள்ளிட்ட சோசலிச அடிப்படையிலான செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட்டு, எதேச்சதிகாரப் போக்கு ஆட்டம் போடுகிறது.

ஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு, சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில், உரிமைகளை மீட்கவும் நலன்களைக் காக்கவும் முன்னெப்போதையும் விட அதிகமாகத் தேவைப்படுகிறார் நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதி.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும்
தனது தொண்டர்களுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வளித்த தலைவர் கருணாநிதி தான் இப்போதும் நம்மை வழிநடத்துகிறார். அவருடைய பேராற்றலில் ஒருசில துளிகளை நாம் பெற்றாலும் போதும். வேறு ஆற்றல் ஏதுமின்றி களம் காண முடியும். நோய்த் தொற்றுக் காலத்தில் உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்வதுபோல, இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல்தான் தலைவர் கருணாநிதி எனும் மகத்தான ஆற்றல்.
நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் பெருங்கடல் போன்ற பேராற்றலில் உங்களில் ஒருவனான நானும், தொண்டர்களான நீங்களும் சில துளிகளைப் பெற்று ஒருங்கிணையும்போது அது பெரும் ஆற்றலாக மாறும். இதயத்தை விட்டு அகலாத தலைவர் கருணாநிதி வழங்கிய ஆற்றலைக் கொண்டு, மக்களிடம் செல்வோம். தலைவர் கருணாநிதி படைத்த சாதனைகளையும் அதன் பயன்களையும் அவர்களிடம் சொல்வோம். ஜனநாயகத்தைப் பலி கொடுக்கும் சக்திகளை மக்களிடம் அடையாளம் காட்டுவோம்.

ஓய்வறியாச் சூரியனுக்கு நினைவேந்தல்
நெருக்கடிகளுக்கு அஞ்சாமல், திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம். தேர்தல் களத்தில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தி அதனை, தலைவர் கருணாநிதியின் ஓய்விடத்தில், அவருடைய திருவடிகளில் காணிக்கையாக்குவோம். அதுவரை ஓயாமல் உழைப்பதே, அந்த ஓய்வறியாச் சூரியனுக்கு நாம் செலுத்தும் உகந்த நினைவேந்தலாகும் என மு.க. ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.







