பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்..!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு விசாரணையில் மராத்திய போலீசாருடன் மோதல் ஏற்பட்டதால் சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரைத்துள்ளது. கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்து புகழ்பெற்ற நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜுன் 15ஆம் தேதி மும்பையில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தார்.
இவர் தற்கொலை செய்து கொண்டதாக மராட்டிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீகாரை சேர்ந்தவரான சுஷாந்த் சிங் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் இதில் அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு உள்ளதாகவும் தந்தை புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களுக்கு மும்பை அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று பீகார் போலீசார் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே நேற்று மும்பை சென்ற பாட்னா எஸ்பி திவாரியின் கையில் தனிமைப்படுத்துதலுக்கான முத்திரை குத்தப்பட்டது.
அத்துடன் அவர் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டதற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 50 நாட்களாக எந்த துப்பும் கிடைக்காத நிலையில் சுஷாந்த் சிங் வங்கிக்கணக்கில் இருந்து ஐம்பது கோடி ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மும்பை போலீசாரை காவல் துறை சாடியுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரைத்துள்ளது.






