மகளிர் சுய உதவிக் குழுவினரைத் தற்காலிகமாக நியமிக்கக் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களைத் தற்காலிகமாக ஈடுபடுத்தி கடைகளை நடத்துமாறு அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறை சார்பில் சுமார் 36,300 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 31, 2026 நிலவரப்படி, இக்கடைகளில் 1,714 விற்பனையாளர் பணியிடங்களும், 176 கட்டுநர் (எடையாளர்) பணியிடங்களும் காலியாக உள்ளன. காலிப் பணியிடங்கள் உள்ள கடைகளையும் சேர்த்துப் பல பணியாளர்கள் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருவதால், அவர்களுக்கு அதிகப் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக நிரந்தரப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறைக்குச் சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. அதுவரை பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிப்பதிலும், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திலும் எவ்விதத் தடையும் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த மாற்று ஏற்பாட்டை அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் மற்றும் மகளிர் திட்ட அலுவலர் ஆகியோரை உள்ளடக்கிய சிறப்புத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கடை வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்களைக் கூட்டுறவுத்துறையிடமிருந்தும், தகுதியான உறுப்பினர்களின் பட்டியலை மகளிர் திட்ட அலுவலரிடமிருந்தும் பெற்றுத் தேர்வை நடத்தும்.
இந்தத் தற்காலிகப் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பல்வேறு தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சம்பந்தப்பட்ட கடை அமைந்துள்ள ஊராட்சி அல்லது நகர்ப்புற வார்டு பகுதியைச் சேர்ந்த, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள். அந்தக் குழுக்கள் முறையான கணக்குப் பதிவேடுகளைப் பராமரிப்பதாகவும், வங்கிக் கடன் நிலுவை இல்லாததாகவும் இருக்க வேண்டும்.
மேலும், விற்பனையாளர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும் அடிப்படைக் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாகவும், குற்றவியல் வழக்குகள் ஏதும் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களோ அல்லது கூட்டுறவுச் சங்க இயக்குநர்கள் மற்றும் பணியாளர்களின் நெருங்கிய உறவினர்களோ இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு செய்யப்படும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, விற்பனை முனையக் கருவியில் விவரங்களைப் பதிவு செய்து பொருட்களை விநியோகிப்பது குறித்து உரியப் பயிற்சி அளிக்கப்படும். தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்படுவோருக்கு தினசரி ஊதியமாக தலா 400 ரூபாய் வழங்கப்படும் என்றும், மாதத்திற்கு அதிகபட்சமாக விற்பனையாளருக்கு 7,500 ரூபாய்க்கு மிகாமலும், எடையாளருக்கு 6,600 ரூபாய்க்கு மிகாமலும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





