வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவ.17-ம் தேதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 15) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலம், தற்போது சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 860 கிலோமீட்டர் தொலைவிலும், அந்தமான் ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து (போர்ட் பிளேர்) மேற்கு-தென்மேற்கே 700 கிலோமீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கு-தென்கிழக்கே 1,040 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை (நவம்பர் 16) தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‘புயலாக’ வலுப்பெற வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் 17-ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இது ‘தீவிர புயலாக’ (Severe Cyclonic Storm) மேலும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




