முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்!
மேகதாது அணை விவகாரத்தில் மாநில உரிமையை விட்டுத் தர முடியாது என கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் டெல்லிப் பயணம் கவனம் பெற்றுள்ளது. மேகதாது விவகாரத்தில் பிரதமர் முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமார், “மேகதாது திட்டத்தை கர்நாடகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை யாராலும் தடுக்க முடியாது.
சட்டரீதியாக எங்களுக்கு நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” தெரிவித்த கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
தனது கடிதத்தில், மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பேசியதை குறிப்பிட்டு, காவிரி என்பது வெறும் நீர்ப்பங்கீடு மட்டுமல்ல, தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது என்றும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி நீரையே நம்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், காவிரி நீர் உரிமையைச் சட்டப்பூர்வமாகப் பெறுவதே தமிழ்நாட்டின் நிலைப்பாடாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயப் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனை காக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதேபோல், கர்நாடக முதல்வருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், மேகதாதுவில் அணையைக் கட்ட விடக்கூடாது என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு எதிர்வினையாற்றி உள்ள கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டு கட்சிகள் அரசியல் செய்வதாகவும், மாநில உரிமையை ஒருபோதும் விட்டுத் தர முடியாது எனவும் தெரிவித்தார். இந்நிலையில், முதலமைச்சர் விஜய் நாளை (16ஆம் தேதி) டெல்லி செல்கிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ளும் நிலையில், மேகதாது விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் பேசி கர்நாடக முதல்வருக்கு கடிவாளம் போடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




