சாத்தான் குளத்தில் காவலர்களால் அடித்து மேலும் ஒருவர் கொலை..! வெளிவரும் உண்மைகள்..!
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் சேர்ந்த வடிவு என்பவர் தாக்கல் செய்த மனுவில் மே 18 ஆம் தேதி ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக தனது மூத்த மகன் துறையை தேடி சந்தேகத்தின் பேரில் விசாரிக்க வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது துரை வீட்டில் இல்லாததால் இளைய மகன் மகேந்திரனை அழைத்து சென்றதாக வடிவு கூறியுள்ளார். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளராக கணேஷ் ஆகியோர் சுயநினைவை இழக்கும் அளவிற்கு மகேந்திரனை தாக்கியதாகவும் தலையில் காயம் ஏற்பட்டு ஜூன் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் நீதிமன்ற காவலில் இருக்கும் தனது மகன் துறையையும் விடுவிக்க மாட்டோம் என்று மிரட்டி வருகின்றனர். அதனால் அஞ்சி எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்றும் வடிவு மனுவில் கூறியுள்ளார்.
இச்சூழலில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளி வந்திருக்கும் நிலையில் தனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும் தனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.







