கொரோனா சிகிச்சை மாத்திரையை அறிமுகம் செய்த மும்பையை சேர்ந்த நிறுவனம் …!
கொரொனா சிகிச்சைக்கு மும்பையை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த மாத்திரை சந்தையில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. பேபிப்ளு என்ற பெயர் கொண்ட ஒரு மாத்திரையின் விலை 103 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
34 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை 3 ஆயிரத்து 500 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளென்மார்க் நிறுவனம் தயாரித்துள்ள ஃபேபிபிரவீர் என்ற மாத்திரைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்தியாவில் கொரொனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஃபேபிபிரவீர் தான் வாய்வழியாக உட்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட முதல் மருந்து எனக் கிளென்மார்க் நிறுவனம் கூறியுள்ளது. குறைவானது முதல் மிதமானது வரை பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற இது ஓரளவு உதவும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரொனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மற்றொரு மருந்தான ரெம்டெசிவரை இந்தியாவில் உற்பத்தி செய்ய சிம்பிளா மற்றும் ஹெட்டிரோ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆபத்து காலத்தில் மட்டும் இந்த மருந்தை பயன்படுத்த மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.






