தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் பெய்து வரும் சாரல் மழையால் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகளும் அவதியடைந்தனர். கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரத்தில் கடந்த வாரம் முதல் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் சோளம், கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு போதிய நீர் எளிதில் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில் அதிகாலை முதல் பெய்த சாரல் மழையால் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தினசரி காய்கறி சந்தைக்கு காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். திறந்தவெளியில் சந்தை அமைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் தார்பாயை போர்த்தி காய்கறிகளை பாதுகாத்தனர்.
புதுக்கோட்டை நகர் பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர்.
இந்நிலையில் புதுக்கோட்டை நகர் பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. மச்சுவாடி, காமராஜபுரம், அசோக் நகர், கணேஷ் நகர், காந்தி நகர், பேருந்து நிலையம், பிரிந்தாவனம் பகுதிகளில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.






