தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12 ஆக உயர்வு ..! தனியார் விமான நிறுவன பொறியாளரும் பலியான சோகம்!!
தமிழகத்தில் கொரானோ வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை12 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் சென்னையில் தனியார் விமான நிறுவன பொறியாளர் மற்றும் 45 வயது பெண் என இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் விறுவிறுவென அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியா முழுவதும் 909 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 34 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8645 ஆக உயர்ந்து, உயிரிழப்பும் 288 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்திலும் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கெரோனா பாதிப்பு உறுதியாகி எண்ணிக்கை 968 ஆகவும், நேற்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு10 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு தனியார் விமான நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரியும் 51 வயது நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு நோய்த் தொற்று பரவியது எப்படி எனவும், அவருடன் பணிபுரிந்த மற்றவர்களுக்கும் பரவியதா ? என்பது குறித்தும் கண்டறியும் பணியில் சுகாதார அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கெரோனா பாதிப்பால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். இந்தப் பெண்ணின் கணவர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த நிலையில், அவரும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவர் மூலம் அவருடைய மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று இரவும், இன்று காலையும் அடுத்தடுத்து 2 பேர் பலியானதால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.






