“என்னாங்கடா நடக்குது நாட்டுல..?” ஊரடங்கு நேரத்தில டாஸ்மாக் கடையில் பகிரங்க விற்பனை..! திருவிழா போல் கூடிய குடிமகன்கள்…! கூடவே ஏட்டையாவும் ஆட்டைய போட்ட கூத்து!!
நாடே ஊரடங்கால் ஒடுங்கிக் கிடக்க, மதுரை அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் சரக்கு விற்பனை பகிரங்கமாக நடக்க, குடிமகன்கள் கூட்டம் திருவிழா போல படையெடுத்து பாட்டில்களை கூடுதல் விலை கொடுத்து அள்ளிச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. போதாக்குறைக்கு தகவல் அறிந்து வந்த போலீஸ் ஏட்டையா ஒருவரும் பாட்டில்களை சட்டைப் பைக்குள்ளும், கட்டைப் பைக்குள்ளும் திணித்துக் கொண்டு சென்ற சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பீதியில் நம் நாடே அலறிக் கொண்டுள்ளது. பணக்கார உலக நாடுகள் பலவும் கொத்துக் கொத்தாக மனித உயிர்களை பறிகொடுத்து வருகின்றன. இதற்கு மருந்து இல்லையென்ற நிலையில்,மக்கள் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்த கொடிய வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முடியும் என்பது ஒன்று மட்டுமே தீர்வாக பார்க்கப்படுகிறது.

இதனால், நம் நாட்டில் 2 1 நாட்களுக்கு ஊரடங்கு உ த்தரவு போடப்பட்டு, 130 கோடி மக்களையும் வீடுகளுக்குள் முடங்கச் செய்துள்ளது மத்திய அரசு . அத்தியாவசிய பணிகள் தவிர்த்து, நாட்டில் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. உற்பத்தி தொழிற்சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. அனைத்து வித போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளன. கோவில்கள்,மசூதிகள், சர்ச்சுகள் என மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. மக்கள் தெருக்களில் நடமாடவும் ஏக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதில் டாஸ்மாக் கடைகள்,பார்கள், கேளிக்கை விடுதிகளும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால், தினமும் சரக்கே கதி என்று கிடந்த பெரும் குடிமகன்களின் பாடுதான் படு திண்டாட்டமாகி விட்டது எனலாம். ஊரெல்லாம் டாஸ்மாக் கடைகள் அடைத்து கிடக்க, கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை பதுக்கி இரு மடங்கு விற்கப்படும் சரக்குகளை வாங்க அலை பாய்ந்தனர். ஆனால் ஊரடங்கு போட்டு 10 நாட்கள் ஆவதால் கள்ளச்சந்தையிலும் சரக்கு கிடைக்கவில்லை போலும்.
இதனால்,பித்துப் பிடித்தது போலான குடிமகன்கள், அடைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளை உடைக்கவும் ஆரம்பித்தனர். தமிழகத்தில் இது போல் ஐந்தாறு கடைகள் உடைக்கப்பட்டதால், பதறிப் போன டாஸ்மாக் நிர்வாகம் திடீரென ஒரு முடிவை எடுத்தது. அடுத்து வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் பூட்டப்பட்ட மற்ற கடைகளுக்கும் இதே நிலைமை ஏற்படலாம் என்று உஷாரான டாஸ்மாக் நிர்வாகம், அனைத்து கடைகளிலும் உள்ள சரக்கு பாட்டில்களை பத்திரமாக குடோன்களில் கொண்டு சேர்க்க உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே சிட்டம்பட்டியை அடுத்த பொருசு பட்டியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையில் உள்ள சரக்கு பாட்டில்களை ஏற்றிச் செல்ல லாரியுடன் கணேசன் என்ற கடை சேல்ஸ்மேன் இன்று காலை சென்றார். கடையை திறந்தது தான் தாமதம், குடிமகன்களின் கூட்டம் கடையை மொய்த்துவிட்டது. சேல்ஸ்மேனிடம் பாட்டிலுக்கு 100 ரூபாய் வரை கூடுதலாக தருவதாகக் கூறி குடிமகன்கள் கெஞ்சிக் கூத்தாடி, காசுக்கு ஆசைப்பட்ட சேல்ஸ்மேன் கணேசனும் மளமளவென சரக்கு விற்பனையை தொடங்கி கல்லா கட்ட ஆரம்பித்தார்.
டாஸ்மாக் கடையில் சரக்கு விற்பனை என்ற தகவல் தீயாய் பரவ, சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி மதுரையிலிருந்தும் இரு சக்கர வாகனங்களில் குடிமகன்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். இதனால் கடை இருந்த பகுதி முழுவதுமே திருவிழாக் கூட்டம் கூடியது மட்டுமின்றி, பாட்டில்களை மொத்தம் மொத்தமாக வாங்கிச் செல்ல ஆரம்பித்தனர்.
இதைக் கண்ட உள்ளுர் பொது மக்களோ பீதியும் அதிர்ச்சியும் அடைந்து, சிட்டம் பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அங்கே தான் ஒரு பெரும் கூத்து நடந்தேறியது. கொடுமை கொடுமைன்னு கேஸிலுக்கு போனா அங்கே ஒரு பெருங் கொடுமை அரங்கேறியது என்பார்களே? அது போல வேக வேகமாக பைக்கில் வந்த போலீஸ் ஏட்டையா கண்ணன் என்பவர் நடத்திய கூத்து தான் அது. நேராக டாஸ்மாக் சேல்ஸ்மேனிடம் சென்று மிரட்டல் விடுத்தபடியே, காசு கொடுக்காமல் தன் பங்குக்கு பாட்டில்களை அள்ள ஆரம்பித்தார். தான் கொண்டு வந்த பெரிய பைக்குள் பாட்டில்களை அள்ளி நிரப்பி விட்டு, போதாக்குறைக்கு சட்டைக்குள்ளும், பேண்ட் பாக்கெட்டிலும் பாட்டில்களை திணித்த ஏட்டையா கண்ணன், ஏதும் நடவாதது போல் வண்டியை கிளப்பி எஸ்கேப்பான கூத்து நடந்தேறியது.

ஊரடங்கை மீறியதாகக் கூறி இரு சக்கர வாகனங்களில் செல்வோரை பெரிய லத்திகளால் சரமாரி அடி கொடுத்து வருகின்றனர் நம்ம ஊரு போலீசார் . ஆனால் சட்டவிரோதமாக டாஸ்மாக் கடையில் சரக்கு விற்பதை தடுக்கவும், கும்பலை கலைக்கவும் செய்யாமல், தன் பங்குக்கு சரக்கை ஓசியில் அள்ளிச் சென்ற போலீசின் கடமையுணர்வை என்ன வென்று சொல்வது?
டாஸ்மாக் நிர்வாகமும் போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், கடைகளை திறந்து சரக்குப்பெட்டிகளை அப்புறப்படுத்த முயன்ற செயலும் அலட்சியப் போக்கையே காட்டுகிறது. இதற்கிடையே டாஸ்மாக் கடைகளில் இருந்து குடோன்களுக்கு எடுத்துச் செல்லும் போதும் சரக்குகள் பெட்டி, பெட்டியாக கைமாறுவதாகவும் புகார்கள் எழுந்து வருவதும் பகீர் கிளப்புகிறது.






