ஆதிவாசி மக்களுக்கு ஒரு டன் அரிசி , 5 ஆயிரம் முக கவசங்களை வழங்கிய ராணுவ வீரர்கள் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து 2015 ஆக உயர்ந்து , பலி எண்ணிக்கையும் 58 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் அதிகம் பேர் உயிரிழந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகை கிடுகிடுக்க வைத்து வருகிறது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி உலக அளவில் கெரோனா பாதிப்பு 88,585 ஆகவும், உயிரிழப்பு 3050 ஆகவும் இருந்தது. ஒரு மாத காலத்தில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 மடங்கை கடந்து 1,94,286 ஆகவும், உயிரிழப்போ 16 மடங்காகி 47,250 ஆக அதிகரித்து உலக நாடுகளை நடுநடுங்க வைத்து வருகிறது.

 

இந்தியாவிலும் மெல்ல உயர்ந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 3 நாட்களாக வேகம் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 469 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி 2014 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் கடந்த 24 மணி நேரத்தில் 17 அதிகரித்து 58 ஆக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் 18 பேரும், குஜராத், ம.பி.யில் தலா 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்திலும் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 234 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இந்த கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரணம் வழங்க பொதுமக்கள் நிதி வழங்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது.இதனையடுத்து தமிழக அரசின் நிவாரண நிதிக்காக தொழிலதிபர்களும்,தன்னார்வலர்களும் தாமாக முன் வந்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியினை அளித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் கோவையில் இருந்து ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டு ராணுவத்தில் தற்போது பணியாற்றி வரும் இராணுவ மேஜர்கள் ஒண்றிணைந்து கோவையில் உள்ள ஆதிவாசி கிராம மக்களுக்கு ஒரு டன் அரிசி , 5 ஆயிரம் முக கவசங்களை வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

 

இந்திய கப்பல் படையின் டிரெயினிங் கமாண்டர் டெல்டா ஸ்குவாட் ஈசன் தலைமையிலான கோவையை பூர்வீகமாக கொண்டு தற்போது ராணுவத்தில் பணியாற்றி வரும் மேஜர்கள் தலைமையிலான குழுவினர் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி உள்ளிட்டோரை சந்தித்து குவாண்டி காலனி ஆதிவாசியின மக்களுக்காக ஒரு டன் அரிசி மற்றும் 5 ஆயிரம் முக கவசங்களை வழங்கினர்.மேலும்,10 ஆயிரம் முக கவசங்கள் தயாராகி வருவதாகவும் தெரிவித்தனர்.

 

மேலும் , அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்த கே.பி.ஆர்.குழுமங்களின் தலைவர் டாக்டர்.கே.பி.ராமசாமி தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக 1 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார்.

மேலும்,அமைச்சரை சந்தித்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வரின் நிவாரண நிதிக்காக ஒரு லட்ச ரூபாயினை வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும்,தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக கோவை மாவட்டத்தில் இன்று காலை வரை மட்டும் பிரபலமான ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பி.சிவகணேஷ் வழங்கிய ஒரு கோடி ரூபாய் உட்பட பலர் மூலம் கொடுக்கப்பட்டுள்ள தொகை ரொக்கம் மற்றும் காசோலையாக ரூ.1,41,41,366.50 வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

 

சாதி,மதம்,இனம்,மொழி கடந்து மனிதத்தை காக்க நாமும் ஒன்றிணைவோம்.கொரோனா விரட்டியடிப்போம்.


Leave a Reply