நேத்து முதல்வர் எடப்பாடி இட்லி, பொங்கலை ருசி பார்த்தாங்க..! இன்னைக்கி மகனுடன் அம்மா உணவகத்தில் டிபன் சாப்பிட்ட ஓபிஎஸ்!!

Publish by: செய்தி்ப் பிரிவு --- Photo : Arrangement


அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் நேற்று ருசித்து பார்த்து ஆய்வு செய்தது போல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது சொந்த ஊரான தேனியில் தனது மகனும் எம்.பி.,யுமான ரவீந்திரநாத் குமாருடன் அம்மா உணவகத்தில் ஆய்வு செய்து இட்லி, பொங் அலையும் ருசித்துப் பார்த்தனர்.

 

கொரோனா வைரஸ் பீதியில் தமிழகம் அலறிக் கிடக்கிறது. ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டுள்ளதால், வேலை, தொழில் எதுவுமின்றி மக்களும் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். தமிழகத்தில் கொரோனா பீதியும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடியும், அமைச்சர்களும் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

 

இதில், அமைச்சர்கள் பலரும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தெருத்தெருவாக இறங்கி கிருமி நாசினி தெளிப்பது போன்ற பணிகளில் தாங்களே களத்தில் இறங்கி நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறதா என்பதையும் முதல்வர் எடப்பாடி முதல் அமைச்சர்களும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னையில் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், உணவுக்காக தவிப்போரின் பசியைப் போக்க, அம்மா உணவகங்களில் மலிவு விலையில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று பட்டினப்பாக்கம், சாந்தோம், கலங்கரை விளக்கம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ததுடன், இட்லி மற்றும் பொங்கலை ருசித்து பார்த்து தரத்தையும் பரிசோதித்து நன்றாக இருப்பதாக பாராட்டினார்.

 

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சொந்த மாவட்டமான தேனியில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 

மேலும் தேனியில் நடந்த நிகழ்ச்சியில் மலிவு விலையில் ஒரு வாரத்திற்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பை மக்களுக்கு வழங்கினார். அத்துடன் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்படும் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த ஓ.பி.எஸ்., தனது மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திர நாத் குமாருடன் இட்லி, பொங்கலை ருசித்து சாப்பிட்டனர்.

 

சென்னையில் அம்மா உணவகத்தில் இட்லி, பொங்கல் சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்பூன் மூலம் ருசித்தார். இன்று தேனியிலோ அம்மா உணவகத்தில் ஓபிஎஸ்சும் அவரது மகனும் வழக்கமாக சாப்பிடுவது போல் கையில் எடுத்து சாப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply