--- --:--:-- --

ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மத்திய அரசு எச்சரிக்கை!

3

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ள உள்துறை அமைச்சகம் விதிகளை பின்பற்றாதவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து பல்வேறு நெறிமுறைகளை அறிவித்துள்ள உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தில் 51 முதல் 60 வது பிரிவு மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் 188வது பிரிவு ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

இந்திய தண்டனை சட்டத்தில் 188 ஆவது பிரிவின்படி அரசின் உத்தரவை மதிக்காமல் நடப்பவர்களுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது 200 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி மத்திய அரசு அல்லது மாநில அரசின் அதிகாரிகள் அல்லது ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பவர்களுக்கு ஓராண்டு வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

 

மத்திய அரசு அல்லது மாநில அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காக தவறான தகவல் தெரிவிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பேரிடரை எதிர்கொள்வதற்காக ஒதுக்கப்படும் பணம் அல்லது பொருளை கையாடல் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

பேரிடரின் வீரியம் குறித்து தவறான எச்சரிக்கைகளை தருவோருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அரசின் துறைகள் ஏதேனும் தவறு செய்தால் அந்த துறையின் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பணியை செய்ய மறுக்கும் எந்த அதிகாரிக்கும் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon