--- --:--:-- --

“மீண்டும் இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை!!” கொரோனா குறித்து முக்கிய அறிவிப்பு என்னவோ?

14

பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்துகிறார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளால் அச்ச சூழல் உருவாகியுள்ள நிலையில் பிரதமர் உரையில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

 

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒட்டுமொத்த உலக நாடுகளுமே பீதியில் உறைந்துள்ளன.கடந்த சில நாட்களாக இதன் பாதிப்பு விஸ்வரூபமெடுத்து தினசரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொத்து கொத்தாக உயிரிழக்க பலி எண்ணிக்கை 16,500 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிதீவிரமாக உள்ளது எனவும், உலக நாடுகள் அனைத்தும் மற்ற பிரச்னைகளை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு கூடுதல் கவனம் செலுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் அபாய மணி அடித்துள்ளது.

 

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் 9 ஆக உயர, தற்போது நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு,144 தடை என உத்தரவுகளை பிறப்பிக்க, அனைத்து பணிகளும் முடங்கி ஒட்டு மொத்த தேசமே இப்போது வெறிச்சோடி கிடக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடியும், கொரோனாவின் தாக்கத்தை அவ்வளவு எளிதாக நினைத்து விட வேண்டாம் எனக் கூறி, உங்களின் ஒரு சில வாரங்களை தனிமையில் செலவிட வேண்டி வரும் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பரீட்சார்த்தமாக ஒரு நாள் முழுவதும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் மோடி அழைப்பு விடுக்க, நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கு நடைபெற்று ஒட்டு மொத்த இந்தியாவே ஸ்தம்பித்தது.தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களும் இந்த ஊரடங்கை மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்து, பெரும்பாலான மக்களை வீடுகளில் முடங்கச் செய்துள்ளன.

 

இந்நிலையில் பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார். கொரோனாவை தீவிரமாக எதிர்கொள்வது குறித்த முக்கிய அறிவிப்பு பிரதமர் மோடியின் உரையில் இடம் பெறும் எனவும், அந்த அறிவிப்பு நாடு முழுமைக்கும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு என்ற ரீதியில் இருக்கும் என்றும் கூறப்படுவதால் பிரதமரின் உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon