நளினி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
சட்டவிரோதக் காவலில் இருப்பதாகவும் தன்னை விடுவிக்கக் கோரியும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.
அவரை சட்டவிரோத காவலில் உள்ளதாகக் கருத முடியாது என அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். ஏழு பேரை விடுதலை செய்ய மாநில அரசு நினைத்தாலும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது என்றும் நளினி சட்டவிரோத காவல் இல்லை என்பதால் அவரின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
மாநில அரசின் தீர்மானத்தை மத்திய அரசு ஒப்புக் கொள்ளாதவரை தமிழக அரசின் தீர்மானம் பூஜ்ஜிய மதிப்புடையதாக தான் கருத வேண்டும் என்பதால் நளினியின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியிருந்தது. அமைச்சரவையில் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும் தன்னிச்சையாக செயல்பட முடியாது எனவும் நளினி தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் தண்டிக்கப்பட்டு சிறையில் இருப்பதால் சட்ட விரோதமாக இருப்பதாக நளினி இருப்பதாகக் கூற முடியாது என தெரிவித்த நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




