கோவை எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயலாளர் இக்பால் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்!!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட செயலாளராக இருப்பவர் இக்பால். இவர் காட்டூர் பட்டேல் நகர் பகுதியில் டயர் கடை நடத்தி வருகின்றார். டீ குடிப்பதற்காக அருகில் இருக்கும் பேக்கரிக்கு இக்பால் சென்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இக்பாலை இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.
அப்போது, அவருடன் இருந்த ஷாஜகான் என்பவர் இந்த தாக்குதலை தடுக்க முயன்றார். இதனையடுத்து இருவரையும் தாக்கி விட்டு அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் தப்பி ஒடி விட்டன். இதில் இக்பாலுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.தடுக்க முயன்ற ஷாஜகானுக்கும் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்த பின்னர், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் இக்பால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஷாஜகானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காட்டூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காட்டூர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனை வளாகத்திலும் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது,கோவையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகின்றது என தெரிவித்தார்.7 பேர் கொண்ட கும்பல் எஸ்.டி.பி.ஐ அமைப்பின் மாவட்ட செயலாளர் இக்பால் மற்றும் அவருடன் இருந்த ஷாஜகானை தாக்கியுள்ளனர் என தெரிவித்தார்.

மேலும்,இந்து முன்னணி அமைப்பினர் வன்முறையை கட்டவிழ்த்து வருகின்றனர் எனவும், இந்த வாரத்தில் மட்டும் இஸ்லாமியர்கள் 7 பேர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர் எனவும், வன்முறை சம்பவங்களை காவல் துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்து முன்னணியினர் ஆயுதங்களை பரிமாறி வருகின்றனர் எனவும், மிகப்பெரிய கலவரத்தை நடத்த இந்து முன்னணியினர் திட்டமிட்டு இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும்,கண்காணிப்பு வளையத்திற்குள் கோவை கொண்டு வரப்படாததன் விளைவாகவே இந்த தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுதாகவும் அவர் தெரிவித்தார்.இந்து முன்னணி தலைவர்கள் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே அனைத்து சங் பரிவார் அலுவலகங்களிலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனையிட வேண்டும் எனவும் ராஜா உசேன் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




