கோவை மசூதியில் பெட்ரோல் குண்டு வீசியதாக இருவர் கைது!!
கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மதுக்கரை ஆனந்த் என்பவர் டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். அவரை மீட்ட நண்பர்கள் கோவை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் கோவை கணபதி வேதாம்பாள் நகர் பகுதியில் செயல்பட்ட ஹிதாயத்துல் இஸ்லாமின் சுன்னத் ஜமாத் மசூதி மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.இந்த இவ்விரு வழக்கினையும் கோவை மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று காலை 6 மணியளவில் சரவணம்பட்டி காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக டூவீலரில் வந்த இருவர் காவல் துறையினரை கண்டதும் தப்ப முயன்றுள்ளனர். பின்னர், அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கோவை ரத்தினபுரியை சேர்ந்த பாண்டி ( வயது 41 ), அகில் ( வயது 23 ) என்பதும், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணபதியில் உள்ள மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர்,அவர்கள் ஓட்டி வந்த டூவீலர்,இரு செல்போன்கள்,பெட்ரோல் குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




