கடனை திருப்பி கேட்டதால்… கொரொனா எனக்கூறி பீதியை கிளப்பிய சிறுவன்!
கொடுத்த கடனை கேட்டதால் ஆத்திரமடைந்த சிறுவன் குறிப்பிட்ட கடையில் சிக்கன் வாங்கி சாப்பிட்டதால் கொரொனா வைரஸ் பாதித்ததாக வதந்தி பரப்பியது கடலூர் மக்களை பீதி அடைய செய்துள்ளது. அந்த சிறுவனை கைது செய்த போலீசார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் பக்ருதீன் அலி. இவர் அந்த பகுதியில் சஹானா சிக்கன் சென்டர் என்ற பெயரில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையில் சிக்கன் வாங்கி சாப்பிட்டதால் கொரொனா வைரஸ் பாதித்ததாக வாட்ஸப்பில் தகவல் பரவியது.
இதனால் சிக்கன் விற்பனை பாதிக்கப்பட்டதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் சக்திவேல் என்பவர் இவ்வாறு தவறான செய்தியை பரப்பி உள்ளதாகவும், இதனால் சிக்கன் தொழில் முடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து சக்திவேலை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். முன்னதாக தான் தவறான தகவலை பரப்பியதாக சக்திவேல் ஒப்புக்கொண்டு வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




