டெல்லி வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லி வன்முறை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி அமைதிப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கு காவல்துறை அனுமதி தராத நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி டெல்லி மக்களின் சுதந்திரம், உடமைகள் மற்றும் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
வன்முறையை மத்திய அரசும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசும் அமைதியுடன் வேடிக்கை பார்த்ததாகவும் குற்றம்சாட்டினார். தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக குடியரசுத்தலைவர் கூறியதாக சோனியா தெரிவித்தார்.