எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு..! என்.ஐ.ஏ.அதிகாரிகள் 20 இடங்களில் அதிரடி சோதனை!!
களியக்காவிளை சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில், கொலைக்கு முன் குற்றவாளிகள் தவ்பீக், அப்துல் சமீம் ஆகியோர் தங்கியிருந்த காயல்பட்டினம் வீடு உள்பட தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ வில்சன் கடந்த மாதம் 8-ந்தேதி துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டார். தமிழகத்த உலுக்கிய இந்தக் கொலையில் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.
இந்தக் கொலையில் நேரடியாக ஈடுபட்டு கைதான தவ்பீக், அப்துல் சமீம் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் தீவிரவாத இயக்கத்தின் தொடர்பு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஜஏ) க்கு மாற்றப்பட்டது. கொச்சியைச் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதில், எஸ்ஐ வில்சன் கொலைக்கு முன்னர் கொலையாளிகள் தவ்பிக், சமீம் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மொய்தீன் பாத்திமா என்பவரின் வீட்டில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதனால் இன்று அதிகாலை முதல் மொய்தீன் பாத்திமா வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதேபோல் நெய்வேலி, சென்னை உள்பட தமிழகம், கர்நாடகாவில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




