“இந்தியன் 2” படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து !
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம்ஸ் சிட்டியில் புதன்கிழமை இரவு படத்தின் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ராட்சத கிரேன் எதிர்பாராதவிதமாக சாய்ந்து விழுந்தது.
இதில் கிருஷ்ணா என்ற உதவி இயக்குனர், படப்பிடிப்பில் உதவியாளராக பணியாற்றி வந்த மாது, சந்திரன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. 10 பேர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு சென்று நடிகர் கமல் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில் எத்தனையோ விபத்துகளை சந்தித்து கடந்து இருந்தாலும் இன்றைய விபத்து மிக கொடூரமானது என்றும் மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும் என்றும் அவர்களில் ஒருவனாக அவர்களது துயரத்தில் பங்கெடுப்பதாகவும் அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் என்றும் கமல் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தனது மற்றொரு ட்வீட்டில் மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசி உள்ளதாகவும், முதல் உதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ள கமல் இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்று விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த இரவு விடியட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




