பாஜகவின் தமிழ் பற்று சொல்லில் உள்ளதே தவிர, செயலில் இல்லை
பாஜகவின் தமிழ்பற்று வெறும் சொல்லில் உள்ளதே தவிர செயலில் சிறிதும் இல்லை என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு நிதி ஒதுக்கீடு செய்தது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் தமிழ் மொழியையும், தமிழர்களையும் மத்திய பாஜக அரசு எந்த அளவுக்கு புறக்கணிக்கிறது என்பதை உணர முடிவதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சமஸ்கிருதத்திற்கு 643 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் கூறியதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளில் ஓரவஞ்சனையால் செம்மொழியான தமிழை சிதைப்பது உலக தமிழர் நெஞ்சில் வேல் பாய்ச்சும் விபரீதம் என்று எச்சரித்துள்ளார். எனவே செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு உரிய நிதியை முழுமையாக ஒதுக்க வேண்டும் எனவும் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.





