ஒரு நாள் தொடர் யாருக்கு..? பரபரப்பான பெங்களூரு போட்டியில் இந்திய பந்துவீச்சில் ஆஸி., திணறல்!!
பெங்களூருவில் நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸி., இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீசி வருகிறது. இந்திய வீரர்களின் வேகத்தில் வார்னர், பிஞ்ச் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸி., அணி திணறி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடந்த முதலாவது போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. இதற்கு பழி தீர்க்கும் வகையில் ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.,யை வெற்றி கண்டது இந்தியா. இதனால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமநிலையில் உள்ளன.
இதனால் தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியிலும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தான் டாஸ் வென்றார்.கடந்த இரு போட்டியிலும் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த பிஞ்ச், இன்றைய போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆனால் ஆஸி., அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னரும், ஆரோன் பிஞ்ச்சும் தொடக்கத்திலேயே இந்திய வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள திணறினர். ஷமியின் வேகத்தில் வார்னர் (3) வீழ்ந்தார். தொடர்ந்து பிஞ்ச்சும் 19 ரன்களில் அவுட்டானார். இதனால் ஓபனிங் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் ஆஸி., அணி திணறி வருகிறது. ஸ்மித்தும், லபுசோனும் ஆஸி., அணியின் சரிவை மீட்க போராடி வருகின்றனர்.





