--- --:--:-- --

தனியார் பால் விலை உயர்வு – தமிழகத்தில் நாளை முதல் அமல்

1

தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி பால் நிறுவனமான ஹட்சன், ஆரோக்கியா, டோட்லா பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.

 

மூலப்பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி கடந்த ஆண்டு மட்டும் இந்நிறுவனங்கள் எட்டு ரூபாய் வரை பால் விலையை உயர்த்திய நிலையில், தற்போது பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு காரணமாக விலையை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வை தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் கொழுப்பு சத்து சமன் படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் 48 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், கொழுப்புசத்து நிலைப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் 52 ரூபாயிலிருந்து 56 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் கொழுப்புசத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் 60 ரூபாயிலிருந்து 62 ரூபாயாகவும், தயிர் ஒரு லிட்டர் 58 ரூபாயிலிருந்து 62 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.

 

இந்நிலையில் அத்தியாவசிய பொருளான பால் விலை உயர்வால் பொதுமக்கள் முதல் வியாபாரிகள் வரை பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். தொடர் பால் விலை உயர்வால் தேநீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களின் விற்பனை விலை உயரும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon