குஜராத்தில் உருவாகி வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத்தில் உருவாகி வருகிறது. இதில் போட்டிகள் நடத்த சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒப்புதலுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது. உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சிறப்பை இப்போது ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் பெற்றுள்ளது.
இந்த மைதானத்தில் 90,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி உள்ளது. இதன் பிரம்மாண்டத்தை பின்னுக்குத் தள்ளும் வகையில் இதைவிட பெரிய மைதானம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டு வருகிறது.
அங்கு கடந்த 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சர்தார் படேல் மைதானம் 2015 ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட நிலையில் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில் உலகின் மிகப் பெரிய மைதானமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த புனரமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க முடியும்.
ஒரு அறையில் 25 பேர் அமரக்கூடிய வகையில் 75 குளிர்சாதன அறைகள் கொண்ட பார்வையாளர்கள் மாடமும் இதில் அடங்கும். உள்ளரங்கு பயிற்சிக்கூடம் மருத்துவமனை, பிரம்மாண்டமான நீச்சல் குளம் என சகல வசதிகளும் இந்த மைதானத்தில் உள்ளது. முதல் முறையாக ஆடுகளம் அமைந்துள்ள பகுதிக்கு எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
பத்தாயிரம் இருசக்கர வாகனங்கள் 3000 கார்கள் ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கும் வகையில் பிரமாண்டமான பார்க்கிங் வசதியும் இடம்பெற்றுள்ளது.அடுத்தாண்டு திறப்பு விழாவுக் காண உள்ளதால் இந்த பெரிய மைதானத்தில் உலக லெவன் மற்றும் ஆசிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை முதல் போட்டியாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐசிசி ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




