--- --:--:-- --

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிற்கு காவல்துறை சம்மன்!

1

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு இன்று நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியரிடமிருந்து காவல்துறைக்கு முறையான புகார் வரவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் உத்தரவிட்டிருந்தார்.

 

 

இந்த நிலையில், 2வது நாள் விசாரணையின் போது, மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக காவல் துறை தரப்பில் சமர்பிக்கப்பட்டது, மேலும், ஆட்சியர் அளித்த புகாரில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

 

விசாரணையை ஐஜி கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் இறுதிகட்ட விசாரணை அறிக்கையை டிசம்பர் 22ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
விசாரணையின் முன்னேற்றம் குறித்து வரும் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார்.தொடர்ந்து வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையை ஐ.ஜி. காமினி கண்காணிப்பார் என்றும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான்சத்யன், நீதிபதி லட்சுமிநாராயணனிடம் தெரிவித்தார்.

 

 

இதற்கிடையே ஆட்சியருக்கு ஆபாச செய்தி அனுப்பி புகாரில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரிடம் காவல்துறையினர் நேற்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.இதையடுத்து அருள் விக்னேஷ் மீது BNS 75, 78, 79 உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, வருவாய் கோட்டாசியர் முருகன், வட்டாட்சியர் சேகர் ஆகியோரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் விசாரணை நடத்தினார்.

 

 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இல்லத்திற்கு சென்ற மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, எம்.எல்.ஏ அருள்விக்னேஷிடம் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் வழங்கிவிட்டு சென்றுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon