--- --:--:-- --

விஜய் அரசு ஊழல் செய்ய தயார் ஆகிறது : அறப்போர் குற்றச்சாட்டு

10

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை (டெண்டர்) ஆன்லைன் வழியாக மட்டுமே கோர வேண்டும் என்ற நடைமுறையில் மாநில அரசு மாற்றம் செய்துள்ளது. குறைந்த மதிப்பிலான பணிகளுக்கு ஆன்லைன் டெண்டருக்குப் பதிலாக, நேரடியாக ஒப்பந்தப்புள்ளிகளைப் பெறுவதற்கு அரசுத் துறைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அனைத்து டெண்டர்களும் மின்னணு கொள்முதல் இணையதளம் மூலமாகவே நடைபெற வேண்டும் என வலியுறுத்திய ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவுறுத்தலில், 2023 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை மீண்டும் சுட்டிக்காட்டி, ஆஃப்லைன் டெண்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, குறைந்த மதிப்பிலான கொள்முதல்களுக்கும் வரையறுக்கப்பட்ட டெண்டர் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 12 ஆம் தேதி வெளியான புதிய தகவல் தொடர்பு மூலம், குறைந்த மதிப்பிலான பணிகளுக்கு நேரடியாக ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

அரசின் இந்த முடிவு வெளிப்படைத்தன்மையைப் பாதிப்பதுடன், ஒப்பந்தப்புள்ளிகளில் முறைகேடுகள் மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்களும் மூத்த அதிகாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இது டெண்டர் நடைமுறையில் தமிழக அரசு ஏற்கெனவே எடுத்திருந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கும் நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்.

 

இது பற்றி அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், குறைந்த மதிப்பிலான பணிகளுக்கு இ-டெண்டர் இல்லாமல் நேரடியாக ஒப்பந்தப்புள்ளி கோரும் முறையைப் பின்பற்றலாம் என அரசு வெளியிட்டுள்ள புதிய தகவல், வெளிப்படைத்தன்மை தொடர்பான அதன் முந்தைய நிலைப்பாட்டுக்கு முரணாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

 

 

இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக் கூறுகையில், ஜூன் 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவுறுத்தல், 2023 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளையும், 2025ஆம் ஆண்டு குறைந்த மதிப்பிலான கொள்முதல்களுக்கு வரையறுக்கப்பட்ட டெண்டர் முறையைப் பரிந்துரைத்த அரசாணையையும் மீண்டும் உறுதிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

 

 

இதற்கிடையே, ஜூன் மாதம் முதல் அனைத்து முக்கியத் துறைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக இ-டெண்டர் முறையைப் பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் போன்ற அவசரப் பணிகளுக்கு ஆன்லைன் டெண்டர் நடைமுறை தாமதத்தை ஏற்படுத்தக்கூடும். இதுவே அரசின் முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டார். அதேவேளையில், நேரடி டெண்டர் நடைமுறையில் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

 

 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற காணொலி ஆலோசனைக் கூட்டத்தில், குறைந்த மதிப்பிலான பணிகளுக்கு நேரடி ஒப்பந்தப்புள்ளிகளைப் பெறுமாறு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் என். அமுதவள்ளி, திட்ட இயக்குநர்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தியதாகக் குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு மறுநாளே கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக்கின் தகவல்தொடர்பு வெளியானது.

 

 

இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் ஜி. பிரபு கூறுகையில், தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு மாத காலத்துக்கு ஆன்லைன் டெண்டர் முறையே பின்பற்றப்பட்டது. இதனால் அரசியல் அழுத்தங்களில் இருந்து அதிகாரிகள் பாதுகாக்கப்பட்டனர். ஆனால், தற்போது மீண்டும் பழைய நடைமுறைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுவது கவலை அளிப்பதாகத் தெரிவித்தார்.

 

 

மேலும், டெண்டர் நடைமுறைகளில் விதிமீறல்கள் ஏற்பட்டதாகக் கூறி இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO) பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசு விதிகளைத் தளர்த்துவது ஏன் என்றும் சங்கத்தின் மற்றொரு நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், டெண்டர் நடைமுறையில் எந்தவிதமான மாற்றமும் அல்லது விதிமீறலும் செய்யப்படவில்லை எனக் கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக் மறுத்துள்ளார். குறைந்த மதிப்பிலான கொள்முதல்களுக்கு வரையறுக்கப்பட்ட டெண்டர் அல்லது ஒப்பந்தப்புள்ளி முறையை அனுமதிக்கும் 2025ஆம் ஆண்டு அரசாணையும், 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முந்தைய அரசாணைகளும் ஜூன் 3ஆம் தேதி வெளியான அறிவுறுத்தலில் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

 

இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் தனது சமூக வலைதள பக்கத்தில், “ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெரும்பாலும் இணையதள டெண்டர்களாக போட்டு வந்த த.வெ.க அரசு 50 லட்சத்திற்கு கீழ் இருக்கும் டெண்டர்களை பிக்சிங் செய்து ஊழல் செய்ய வழிவகை செய்யும் பாக்ஸ்/லிமிடெட் டெண்டர் முறைகளில் போடலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 

 

அரசு நிதியை பற்றி கவலை பட வேண்டிய நிதித்துறை இதை செய்து இருப்பது மேலும் அபத்தமானது. த.வெ.க அரசு ஊழல் செய்ய தயார் ஆகிறது என்பதையே இது காட்டுகிறது. டெண்டர் சட்டத்தில் அனைத்தும் இணையதள டெண்டர்களாக போட வேண்டும் என்று திருத்தம் கேட்டு வரும் நிலையில் இப்படி வந்திருக்கும் சுற்றறிக்கையை கண்டிப்போம். போராடுவோம், இதை விடவே கூடாது.” என்றும் கூறியிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon