10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொலைகள் குறைவு: டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால்
தமிழகத்தில் சட்ட – ஒழுங்கு சரியாக இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், புதன்கிழமை தமிழக டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் பொறுப்பேற்ற 6 மாதங்களில் பல்வேறு குற்றங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு கொலைகள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு போதைப்பொருள் வழக்குகள் 74% அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 25% வரை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 64% குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு முறையாக பின்பற்றப்படுகிறது” என்றார்.
சமீபத்தி கொலைகள் குறித்து விளக்கமளித்து காவல்துறை அறிக்கை ஒன்றை பகிர்ந்திருந்தது. அதில், “கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 1,323 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டு இதுவரை 1,267 கொலை வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளது. குடும்ப தகராறால் 28%, சிறிய தகராறுகளில் 23% கொலைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முறையற்ற உறவு, மதுபோதையால் தலா 13% கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3,077 கொலை வழக்குகளில் தொடர்புடைய 95.3% குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 20,450 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 1,698 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





