--- --:--:-- --

கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மலேசியா தமிழ் மாநாட்டிற்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு

7

கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு மலேசியாவில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுத்த மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;ஒன்றிய அரசு விரும்பும் வகையில் கீழடி அகழாய்வு முடிவுகளை எழுத மறுத்து வரும் இந்திய தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ) கண்காணிப்பாளர் கி.ராமகிருஷ்ணா மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருப்பது கண்டனத்துக்குரியது.

 

 

ஏ.எஸ்.ஐ ஆய்வாளர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா, டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது.வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA) அனுமதிக்கு தேவையான தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்குவதற்கு முன்பு, ஏ.எஸ்.ஐ இயக்குநர் அவருக்கு எழுதிய கடிதத்தில், “ஏ.எஸ்.ஐ அல்லது இந்திய அரசின் செயல்பாடு, கொள்கைகள் அல்லது நற்பெயரை விமர்சிக்கும் எந்த கருத்தையும் நீங்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.

 

 

அவரது விவாதங்களில் ஏ.எஸ்.ஐ அல்லது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்லது கொள்கைகளுக்கு எதிரான எதுவும் இருக்கக் கூடாது. நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். உறுதிமொழி கிடைத்தவுடன் FCRA அனுமதிக்கான முறையான NOC உடனடியாக வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

 

 

அமர்நாத் ராமகிருஷ்ணா அந்த உறுதிமொழியை தர மறுத்துவிட்டதாகவும் அதனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்திலும் அவர் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.கீழடி அகழாய்வு தளத்தின், ஆரம்பக் கட்டம் தளம் கி.மு. 8-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை இருந்திருக்கலாம் என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியிருந்தார்.

 

 

ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஏ.எஸ்.ஐ, அந்த ஆரம்பக் கட்டத்திற்கு கொடுக்கப்பட்ட காலத்தை மறுத்து, அறிக்கையில் திருத்தங்கள் செய்யுமாறு கேட்டது. ஆனால் அவர் அதை செய்யவில்லை என்பதால் வெளிநாடு செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.ஒன்றிய பா.ஜ.க அரசின், திராவிட மற்றும் தமிழர் நாகரீகத்தின் தொன்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பண்பாட்டு மேலாதிக்க செயல்பாடும், இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற அதன் இந்துத்துவா மதவெறி அரசியல் கருத்தியலும், பன்மைத்துவத்தை நிராகரித்து ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கும் போக்கும் காரணமாகும்.

 

 

ஒன்றிய அரசின் இத்தகைய செயல்பாடு அறிவியல், வரலாறு, தொல்லியல் அகழாய்வு ஆகியவற்றை காவிமயமாக்கும் முயற்சியாகும். இது நமது அரசியல் சட்டம் உறுதி செய்துள்ள ஜனநாயகம், மதச்சார்பின்மை, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றிற்கு எதிரானதாகும். ஒன்றிய அரசின் இத்தகைய செயல்பாடுகளை தடுத்து நிறுத்திட அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற, இடதுசாரி சக்திகளும் ஒன்றுபட்டு செயல்பட முன்வரவேண்டும்.

 

 

உடனடியாக, அமர்நாத் ராமகிருஷ்ணா மலேசியா செல்ல அனுமதி வழங்கிட வேண்டுமென ஒன்றிய அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon